புதுக்கடை அருகே பெண்களிடம் அத்துமீறியதை கண்டித்த தாயாரை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கள்ளியோடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மனைவி பொன்நேசம்(65). இவர்களுக்கு 5 மகன்கள் உண்டு. குழந்தை வேலு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
இதனால் பொன்நேசம் காய்கறி வியாபாரம் செய்து 5 மகன்களையும் படிக்கவைத்துள்ளார். இவரது மூத்த மகன் ரவி மற்றும் 2ம் மகன் பாபு ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். 3ம் மகன் சுரேஷ் பெயிண்டராக உள்ளார். 4ம் மகன் ராஜன். இவர் டிபார்ம் படித்துள்ளார். 5ம் மகன் சேம். கூலித்தொழிலாளி.
இதில் ராஜன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. போதையில் இருக்கும் போது பெண்களிடம் தவறாக நடந்து கொள்வாராம். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது அண்ணன் சுரேஷின் மனைவி குளிப்பதை ராஜன் மறைந்திருந்து பார்த்துள்ளார்.
இதை கண்டித்த சுரேஷை, ராஜன் கொடூரமாக அடித்து கொலை செய்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவரது தாய் பொன்நேசம் மகனுக்கு மனநிலை பாதிப்பு எனக் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய கோர்ட் தண்டனையின்றி ராஜனை விடுவித்தது. சிறையில் இருந்து வெளிவந்த ராஜன் அடிக்கடி தனது தம்பி சேமிடம் தகராறு செய்துள்ளார். தன்னை அண்ணன் கொலை செய்து விடுவார் என பயந்த சேம் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
சமீபகாலமாக ராஜன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். அங்கும் உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து மருத்துவனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. மகனின் நடவடிக்கையால் மனவருத்தம் அடைந்த பொன்நேசம், ராஜனை கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராஜன் நேற்று இரவு தாயார் பொன்நேசத்தை அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது சடலத்தை வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்க விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து உறவினர்கள் புதுக்கடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
பொன்நேசத்தின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காப்புக்காடு பகுதியில் பதுங்கியிருந்த ராஜனை கைது செய்தனர். கொலைகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment