இலங்கையில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்ற போதிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பொது வசதிகள் இன்னும் சீராக செய்யப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாகப் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய சந்தை வசதிகள் நகரில் இல்லையென வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.யுத்த காலத்திலும், மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலும், கிளிநொச்சி நகரில் இயங்கி வந்த பொதுச் சந்தை அங்கிருந்து அகற்றப்பட்டு இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள அம்பாள்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் வர்த்தகர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதியற்ற இடத்தில் இந்தப் பொதுச் சந்தை அமைக்கப்பட்டிருப்பதால், அங்கு மக்கள் செல்வதில்லை. இதனால் வழமையான வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக சந்தை வியாபாரிகள் பெரும் நட்டத்திற்கு உள்ளாக நேரிட்டுள்ளது.
கிளிநொச்சி நகரில் இருந்து தொலைவில் ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சந்தையைக் கொண்டு சென்றிருப்பதனால், நகரில் இருந்து பெரும் பணம் செலவழித்து சந்தைக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி நகரின் பொதுச் சந்தை ஆறுமாதத்தில், அதன் பழைய இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவிடும் என அதிகரிகள் உறுதியளித்திருந்த போதிலும் ஒரு வருடத்திற்கு மேலாகிய போதிலும் உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என்று சந்தை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேபோன்று கிளிநொச்சி பேரூந்து நிலையமும் பயணிகள் நிற்பதற்குக்கூட வசதியற்ற நிலையில் உள்ளது. பேரூந்துகள் நிற்பதற்கு உரிய இடமில்லை. பயணிகள் தங்க நிற்பதற்கு நிழல்குடைகள் கூட இல்லாதிருக்கின்றது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்தப் பொதுவசதிகளை ஏற்படுத்துவதற்குப் பொறுப்பான கரைச்சி பிரதேச செயலாளர் குமாரசுவாமி தவசோதி, மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட போது பல்வேறு காரணங்களினால் அம்பாள்குளத்திற்கு சந்தையை மாற்ற வேண்டியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவற்றை ஏற்படுத்திக்கொடுப்பதற்காகப் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் பழைய இடத்தில் 274 மில்லியன் ரூபா செலவில் புதிய சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு இந்தப் பணிகள் முற்றுப் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment