
தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் பேருந்துடன் மோதியது குற்றம் எனக் கூறி முல்லைத்தீவு தனியார் பேருந்துச் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த மக்கள் ஆகியோர் மீது படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை பரந்தன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பரந்தன் சந்தியூடாக முல்லைத்தீவுக்கான தனியார் போக்குவரத்துச் சபை பேருந்து பயணத்தை மேற்கொண்டிருந்தது.
இதன்போது முல்லைத்தீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளுடன் வந்த பேருந்தொன்று தனியார் பேருந்துடன் பக்கவாட்டாக உராய்ந்து சென்றுள்ளது.
இதில் தனியார் பேருந்தின் பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. எனினும் தம்மிலேயே பிழை இருப்பதாக தெரிவித்த சுற்றுலாப் பயணிகள் பேருந்தின் சாரதி தனது பக்க கண்ணாடியை கழற்றி கொடுத்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் விடயம் அறிந்து அங்கு வந்த படையினர், குறித்த தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதுடன், தொடர்ந்து பயணிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் அங்கு கூடி நியாயம் கேட்டபோது படையினர் பொதுமக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பரந்தன் சந்தியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இதேவேளை குறித்த தனியார் பேருந்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்குரியதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சங்கத்தின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது. இது தொடர்பில் தமக்கு அறியத்தரப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் தெரிவித்ததுடன், இதற்கெதிராக பணி பகிஷ்கரிப்பு நடத்தப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.


No comments:
Post a Comment