பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் 13 வது வருட தமிழ்ச்சோலை மாலை 11.12.2012. ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் முக்கிய நகரத்தில் ஒன்றான குசான்வில் என்னும் இடத்தில் space Pierre de Coubertin என்னும் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் மக்களின் பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றான இனியம் என்ற நடனத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஆஜர்ந்தே மாணவ, மாணவியரின் தமிழ்ச்சோலை கீதத்தை தொடர்ந்து வணக்க நடனம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 30 வரையிலான பாடசாலைகள் நிகழ்வுகள் தந்திருந்தனர். நடனம், பாடல், கவிதைகள் எழுச்சி நடனங்கள், பாரதியார் பாடல்கள், கண்ணன் நடனம், வீணை இசை, கிராமிய நடனம், கோலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளை மாணவர்கள் தந்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பரப்புரைப்பொறுப்பாளரும் உரைகளை ஆற்றியிருந்தார்.
இவர்கள் தமது உரைகளில் புலம் பெயர்ந்த மண்ணில் அந்நிய கலாச்சார மொழி வாழ்வுக்குள் எமது குழந்தைகள் தாய்மொழி தமிழினை கற்பதுவும், அதனை கற்பிக்கின்ற ஆசிரியர்களும் எம்மையும் எம் மொழியையும் காக்கின்ற தெய்வங்களாகவே பார்க்கின்றோம் என்றனர்.
எமது அடுத்த சந்ததியின் தாய் மொழியின் சிறப்பும் வாழ்வும், எதிர்காலமும் நிகழ்கால வாழ்வில் வாழும் தமிழர்களாகிய எம்மவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்றனர்.
உலகப்பந்தில் வாழும் எம் சந்ததியினர் தமிழர்களுக்கும், தமிழ் இனத்திற்கும், மொழிக்கும், பேரும் புகழும் சேர்க்கத் தொடங்கிவிட்டனர் என்றும் அந்த வீர வழித்தோன்றல்களின் பெருமை தமிழீழத்துக்கே சொந்தம் என்றும், அந்த பயனை நிச்சம் எமது இனம் அடைந்தே தீரும் அதுவரை தொடர்ந்து உறுதியோடு உழைப்போம் என்று கூறியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆண்டு மலர் வெளியீடு நடைபெற்றது. வெளியீட்டினை குசான்வில் மாநகர முதல்வர் உட்பட்ட ஏனைய உறுப்பினர்கள் வெளியிட்டு வைத்தனர்.
தமிழ் ஆசிரியர் பணியில் பத்து வருட நிறைவு பணியில் உள்ள ஆசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவ்வருடம் முதற்தடவையாக தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தால் பிரான்சு நாடுரீதியில் நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆண்டு 12 தமிழ் மொழி பொதுத்தேர்வில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நன்றியுரையுடன், நல்வாய்ப்பு சீட்டிழுப்புடன் சோதியா தமிழ்ச்சோலையின் மாணவர்களின் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.
இந்நிகழ்வில் குழந்தைகள் பெரியவர்கள் என 1800 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஒன்றுக்கொன்று சாளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் தமது வெளிப்பாடுகளை ஆசிரியர்களும், குழந்தைகளும் நிகழ்வுகள் மூலம் காட்டியிருந்தனர்.
கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கிய கதம்பம் ( நிதர்சனம் ) என்கின்ற நாடகம் அனைவரையும் கவர்ந்ததோடு நிகழ்காலத்தினதும், எதிர்காலத்தினதும் நிதர்சனத்தை சொல்லி நின்றதோடு பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:
Post a Comment