நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இன்று (14.12.2011) புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது.நான்கு நாள் அமர்வாக இடம்பெறவுள்ள இந்தப பாராளுமன்ற கூட்டத் தொடரில் சுதந்திர தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கான பல்வேறு விடயங்கள் கலந்தாய்வு செய்யப்பட இருப்தோடு நா.த.அரசாங்கத்தின் நேசநாட்டு பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பல்வேறுவழிகளிலும் சிறப்பினைப் பெற்றுள்ள இந்த பாராளுமன்ற அமர்வு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையின் முழுவிபரம்:
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான மூன்றாவது அமர்வானது, டிசம்பர்-14 புதன்கிழமை முதல் டிசம்பர்-17 சனிக்கிழமை வரை அமெரிக்க - நியூயோர்க் மாநிலத்தின் (Buffalo) பவலோ நகரத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் தெரிவுக்கமைய, கனேடிய ரொறன்ரோ நகரத்தின் எல்லையில் உள்ள பவலோ நகரமே இந்த அமர்வுக்காக தெரிவு செய்யப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட முதல் இரு அமர்வுகளின் பின்னர் இடம்பெறும் இந்த மூன்றாம் அமர்வானது பல்வேறு வழிகளிலும் முக்கியமுள்ளதாக அமையப்பெறுகின்றது.
எமது அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களின் தெரிவினைத் தொடர்ந்து, ஒரு முழுமையான அவையாகக் கூடுகின்ற இந்த பாராளுமன்ற அமர்வின் போது, வரப்போகும் 2012ம் ஆண்டில், சுதந்திர தமிழீழப் போராட்டத்தை முன்னிறுத்தி, உலக அரங்கில் பல்வேறு முனைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளி சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பற்றியும், தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், காணமல்போதல், சிங்களக் குடியேற்றங்கள் போன்ற பல்வேறு அநீதிகளை, உலகத்தின் கண்களின் முன் வெளிக் கொண்டுவரவேண்டிய பணி மேலோங்கியுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் சிறிலங்கா பற்றிய நிலைப்பாட்டினையும், அதனையொட்டிய போராட்ட முயற்சிகள் குறித்தும் இந்த பாராளுமன்ற அமர்வில் கலந்தாய்வு செய்யப்படவுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேசநாட்டுப் பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும் மற்றும் ஆய்வாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுவும், இன ஒழிப்புத் தொடர்பாக ஆய்வு செய்வதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் சமவேளையில் கூடவுள்ளன.
அரசவையின் கூட்டத் தொடரானது இணையவழியாக, நிகழ நிகழ நேரஞ்சல் செய்யப்படவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவல உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடக சேவை


No comments:
Post a Comment