அதன்படி இன்று (14.12.2011) தேனியில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர்,
முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது, மிகப்பெரிய பிரச்சனையாக கேரள மாநிலத்திற்கும், தமிழத்தில் இருக்கக்கூடிய மக்களிடைய ஒரு கசப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையிலே, கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் திட்டமிட்டு, அந்த செயலில் இன்று அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே தயவு செய்து இந்த உணர்வை புரிந்துகொள்ள வேண்டும்.
கலைஞரை பொறுத்தவரை தொடர்ந்து குரல் கொடுப்பது உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இருந்தால் மட்டும் குரல் கொடுப்பது என்று இல்லாமல், ஆட்சியில் இல்லாத இந்த சூழ்நிலையிலும், குரல் கொடுக்கிறார் என்று சொன்னால், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கிற ஒரே தலைவர் கலைஞர் என்பதை நாடு நன்றாக உணர்ந்திருக்கிறது.
ஆற்றில் வெள்ளம் அடித்து வருகிற நேரத்தில், அதை தடுத்து நிறுத்தி தேக்கி வைத்து, அதனை மக்களுக்கு குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று அதற்காகவே அணைகள் முதல் முதலில் கட்டப்பட்டது. இந்த அணைகள் கட்டுகின்ற முதல் பணியை தொடங்கி, அதனை உலகுக்கு அறிமுகப்படுத்தியது யார் என்று கேட்டால் நம்முடைய தமிழன் தான் என்பதை இன்றைக்கு வரலாறு தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையில் கசிவு இருக்கிறது, பலவீனம் அடைந்திருக்கிறது என்று ஒரு தவறான, திட்டமிட்டு ஒரு அப்பட்டமான பொய் பிரச்சாரத்தை இன்றைக்கு கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய சில அரசியல்வாதிகள் அதிலும் திட்டமிட்டு முதல் அமைச்சராக இருக்கக்கூடிய உம்மன் சாண்டி அவர்களும், அதேபோல் முன்னாள் முதல் அமைச்சர் அவர்களும் சேர்ந்துகொண்டு, எதிலே சேருகிறார்களோ இல்லையோ, கலவரத்தை தூண்டுவதற்கு இரண்டு பேரும் சேர்ந்திருக்கிறார்கள். இதுதான் கொடுமை.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், ஒரு பின்னணி இருக்கிறது. கேரள மாநிலத்திலே ஒரு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அந்த இடைத்தேர்தல் கேரள மாநிலத்தில் இருக்கக்கூடிய எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதி. அந்த இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிற காரணத்தினால் இந்தப் பிரச்சனையை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
அந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றிப் பெற்றிருந்தது. ஆகவே இடைத்தேர்தலில் ஆளுகின்ற காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெற்ற ஆக வேண்டும். வெற்றிப்பெற்றால்தான் தொடர்ந்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடியும். இப்படி ஒரு சூழ்நிலை. ஏனென்று கேட்டால் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய எண்ணிக்கை 70. இடதுசாரி கூட்டணிக்கு சட்டசபையில் இருக்கக்கூடிய எண்ணிக்கை 68.
ஆட்சிப் பொறுப்பிலே யார் இருக்க வேண்டும் என்ற பிரச்சனை அங்கே வந்துவிடும் என்பதால்தான், முல்லைப் பெரியாறு பிரச்சனையை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும், அங்கு இருக்கிற மக்களை குழப்பிவிட வேண்டும் என்பதற்காக கையில் எடுத்துக்கொண்டு தென் தமிழத்தில் இருக்கக்கூடிய தமிழக மக்களுக்கு ஒரு துரோகத்தை இழைக்கக்கூடிய ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.
எல்லா கட்சிகளும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாலும், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே உண்ணாவிரதப் போராட்டம், அதனைத்தொடர்ந்து மனித சங்கிலிப் போராட்டத்தை திமுக நடத்தியிருக்கிறது.
நாளை (15.12.2011) சட்டமன்ற கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பிரச்சனையை மையமாக வைத்து கூடுகிற சட்டமன்ற கூட்டத்தில், என்னைப்போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலைஞர் அவர்களின் உணர்வுகளை, தென்தமிழக மக்களின் உணர்வுகளை சட்டமன்றத்தில் பதிவு செய்வோம்.
எந்தக் காரணத்தைக்கொண்டும், எந்த சூழ்நிலையிலும் கலைஞர் அவர்கள் அரசியல் நோக்க்ததோடு பார்க்காமல், இது தென்மாவட்ட மக்களின் உயிர்நாடி பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, பாசனத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடியது என்ற அதே நிலையில் இருந்து நாம் வெற்றி காண்போம் என்றார்.


No comments:
Post a Comment