சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (14.12.2011) உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே சர்வதேசத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் நியமித்த ஐ.நா நிபுணர் குழுவை இலங்கை அரசாங்கம் உதாசீனப்படுத்தியது மாத்திரமன்றி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற ஒன்றை உள்நாட்டிலேயே அமைத்துக் கொண்டது.
இலங்கை தொடர்பில் விசாரணை நடத்திய சர்வதேச விசாரணை ஆணைக்குழு திருக்கோணமலையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை, அம்பாறையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, கெப்பத்திகொல்லாவையில் சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி இலங்கை அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் சாதக நிலையில் இலங்கை அரசு இல்லை எனினும் சர்வதேச சமூகத்திற்கு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment