முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்தக்கோரியும், கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 12.12.2011 அன்று தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை, கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடங்கிவைத்தார்.
உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசினார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் மாலை பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இது ஒரு சாதாரண பிரச்சினை. இந்த பிரச்சினையை பெரிதுபடுத்திக்கொண்டு இதில் தான் கேரளத்தின் வாழ்வே இருப்பது போல மாய்மாலம் காட்டிக்கொண்டு அங்குள்ள அரசும், அங்குள்ள கட்சிகளும் போடுகின்ற நாடகத்தையும், ஆடுகின்ற ஆட்டத்தையும் காணும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை இன்று பிரச்சினையாக மாறியிருக்கிறது. 1895 ல் கர்னல் பென்னி குயிக் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது இந்த அணை. 2 ஆண்டுகளுக்கு முன் நான் அந்த பகுதிக்கு சென்று பென்னி குயிக் சிலையை திறந்து வைத்த உணர்ச்சிமயமான நிகழ்ச்சி இப்போதும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அந்த அணை இப்போது பழுதாகிவிட்டது, புயல், பூகம்பம் வந்தால் தாங்காது, அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் மடிந்திட நேரிடும் என்று பயமுறுத்தி அந்த அணையை தடுக்கிற முயற்சியிலே கேரளத்து மக்கள் "நல்லவர்கள்'' ஈடுபட்டிருக்கிறார்கள்.
"நல்லவர்கள்'' என்பதற்கு வருங்காலத்தில் அகராதியில் என்ன பொருள் எழுதப்படும் என்பதை நான் உங்களுடைய முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
இது ஒரு வீண் வதந்தி. கடந்த காலத்தில் இதுபோன்ற வதந்தி பரப்பிவிடப்பட்டதால் 1981 முதல் 1994 வரை அந்த அணையை மூன்று தடவை பலப்படுத்தியிருக்கிறோம். இதனால் நிலநடுக்கமே ஏற்பட்டாலும் அணை எந்த பாதிப்பும் ஏற்படாது. முன்பைவிட மூன்று மடங்கு பலமாக இருக்கிறது. கேரளாவின் பேச்சை யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
உச்சநீதிமன்றம் 2001 பிப்ரவரி 10 அன்று 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அணையின் உறுதித்தன்மையை ஆராய அமைத்தது. அந்த குழு ஒரு ஆண்டாக ஆய்வு நடத்தி அணை உறுதியாக உள்ளது, நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது. 2002 ஜனவரி 19 ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது நிலையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் முடிவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. 142 அடியாக உயர்த்துவதால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு உறுதி செய்கிறது என்றும் தெரிவித்தார்கள்.
முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் 27.2.2006 ல் அளித்த தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை பார்த்தால் கேரள அரசு கூறும் தகவல்கள் எவ்வளவு மோசமானவை என்பதை புரிந்து கொள்ளலாம். அணை பலமிழந்து விட்டது என்ற கேரள அரசின் கூற்றுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி 142 அடிவரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம். பலப்படுத்தும் எஞ்சிய பணிகளை முடித்த பின்னர் 152 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம். தமிழகம் செய்யும் பராமரிப்பு பணிகளை கேரள அரசு தடுப்பதை கைவிட வேண்டும்.
இதை அப்போதே கேரள அரசு மதிக்காமல் சட்டதிருத்தம் ஒன்றை கொண்டுவந்தது. நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக்கொள்வோம் என்று சட்டமன்றத்தில் கொண்டுவந்து சட்டமாகவே நிறைவேற்றியது கேரளா. ஆனால் இப்போது 120 அடி தான் தண்ணீரை தேக்க வேண்டும் என்று அதே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது. அது என்ன சட்டமன்றமா? அவர்கள் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கக்கூடிய பஞ்சாயத்தை விட மோசமான ஒரு அமைப்பா?
இந்தியாவிலே கேரளக்காரர்கள் மிகுந்த புத்திசாலிகள், அறிவாளிகள் என்று பேசுவதுண்டு, ஏசுவதுண்டு. அவர்கள் இப்படி 136 அடியே போதுமானதாக இல்லை என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போது 120 அடிதான் தேக்க முடியும் என்று சொல்கிறார்கள் என்றால் யார்? யாரை ஏமாற்ற இந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தமிழ் மக்கள் தமிழ் மக்கள் மாத்திரமல்ல இந்திய மக்கள் தேசிய உணர்வு பெற்ற மக்கள் இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிற மக்கள் அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு தமிழ்நாட்டின் செழிப்பை, செல்வாக்கை, செழுமையை, வளத்தை வீணாக்கி அழித்துவிட்டு தமிழ்நாட்டை சகாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளாவிலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமானால் அதனை தமிழன் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு, தன்னுடைய நாடு அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக்கொள்ள மாட்டான்.
நாம் நடத்துகின்ற இந்த அறப்போர் தமிழ்நாட்டில் கேரள மக்கள் இன்றைக்கு சுதந்திரத்தோடு உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சுதந்திரத்தோடு உலா வருவதில் நமக்கு எந்த வித ஆட்சேபனையும் கிடையாது. அதேபோல தமிழர் கேரளத்திலே வாழ வேண்டும். அந்த ஒற்றுமையும் உணர்வும் வளர வேண்டுமானால், வாழ வேண்டுமானால் ஏதோ ஒரு தொகுதியில் வருகின்ற இடைத்தேர்தலை மனதிலே வைத்துக்கொண்டு நாங்கள் எடக்கு செய்வோம் என்றில்லாமல், ஒரு இடைத்தேர்தலுக்காக எவ்வளவு பேர் அடிபடுவது? எவ்வளவு பேர் கொல்லப்படுவது? எவ்வளவு பேர் உடைமைகளை இழப்பது? எவ்வளவு பேர் உயிர்களை பலி கொடுப்பது? என்ற நிலை எல்லாம் ஏற்படாமல் எங்களோடு ஒத்துழைத்து கேரளத்தில் உள்ள பெரியவர்கள், நிபுணர்கள், விவசாயிகள் அத்தனைபேரும் தமிழர்களுடைய கைகளை குலுக்கி, தமிழர்களும் கேரளத்தில் உள்ளவர்களும் சகோதரர்கள் தான் என்ற அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல் எல்லா மக்களும் இந்தியர்கள் தான் முன்னொரு காலத்திலே சேர, சோழ, பாண்டியர்கள் என்ற மூவேந்தர்களின் கொடியின் கீழ் வாழ்ந்தவர்கள் தான் அந்தக் கொடி நிழலில் நாம் உருவாக்கிய உறுதி, ஒற்றுமை நிலைநிறுத்தப்பட இந்த பிரச்சினையில் யாரும் உணர்ச்சிவயப்பட்டுவிடாமல் அவர்களும் நாமும் சகோதரர்கள் என்று வாழ வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை பேண வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே நடைபெறும் இந்த பிரச்சினையை டெல்லியிலே இருந்து வேடிக்கை பார்க்காமல் ஒரு வேடிக்கையாக கருதாமல் இது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கிற ஆபத்தை உணர்ந்து எதிலும் தாமதமாக முடிவை எடுக்கின்ற மத்திய அரசு இதிலே தாமதமாக முடிவெடுக்காமல் தமிழர்களுடைய செங்குருதி தெருவிலே சிந்தாமல் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் பேசினார்.


No comments:
Post a Comment