வாதத்திற்கு மருந்துண்டு, ஆனால் பிடிவாதத்திற்கு இல்லை என்று முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக உள்ள கேரள அரசு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அப்போது அவர் கூறியதாவது,
கடந்த 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி கிடைத்தது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை. அப்போது பதவியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி கேரள அரசை எதிர்த்துக் கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பிரதமர் என்னவென்றால் இரு மாநிலங்களுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்கிறார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன் என்று தெரிந்ததும் என்னை இங்கு வரவிடாமல் தடுத்தனர். போராடி வந்துள்ளேன். கேரள அரசு மக்கள் பிரச்சனைக்காக என்றுமே பொறுத்துப் போனதில்லை. நாம் அனைவரும் இந்தியர் என்று பார்க்கிறோம். ஆனால் கேரளா தான் மக்களைப் பிரித்துப் பார்க்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதை தீர்த்து வைத்ததா? இல்லையே.
சர்ச்சைக்குரிய படம் என்பதால் டேம் 999ஐ நான் பெங்களூருக்கு சென்று பார்த்தேன். தமிழகத்தில் வெளியிட்டாலும் அது ஓடாது. கேரளாவுக்கு காய்கறி அனுப்பாததால் காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் தேனி மக்கள் சந்தோஷமாக உள்ளனர்.
கேரள அமைச்சர் ஜோசப் தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம். ஆனால் அணையை இடித்துக் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார். எவ்வளவு தண்ணீர் தருவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பிறகு மழை வந்தால் தண்ணீர் தருகிறோம் என்பார்கள்.
ஆளுங்கட்சி அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூட்டாக பதவியை ராஜினாமா செய்யட்டுமே பார்க்கலாம். அடுத்த ஆண்டு என்னவெல்லாம் விலை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.


No comments:
Post a Comment