
சிறிலங்காவில் உள்ள அனைத்து குடிமக்களினதும் விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்றை சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளவுள்ளது.
புவிசார் குடிமக்கள் தகவல் முறைமைத் திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா இராணுவம் 2.5 மில்லியன் ரூபா செலவில் இந்த தகவல்களை திரட்டவுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ், ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் சிறிலங்கா இராணுவமும் இணைந்து இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளன.
தென்கிழக்காசியாவிலேயே சிறிலங்காவில் தான் இது முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்கள் பற்றிய தகவல்களையும் எண்முறை அடிப்படையில் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் தற்போது கம்பகா மாவட்டத்தில் முன்னோடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகரும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் தலைவருமான கேணல் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
“நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்கள் பற்றிய துல்லியமான விபரங்களை திரட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஒருமாதக் குழந்தை கூட இந்த விபரத்தில் உள்ளடக்கப்படும்.
இந்த முறைமை தனிப்பட்ட விபரங்களை மட்டும் கொண்டதல்ல. இடம்சார் தகவல்களையும் குறிப்பாக, ஒவ்வொருவரினதும் வசிப்பிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படத்துடன் கூடிய தகவல்களையும் கொண்டிருக்கும்.
தனிப்பட்ட விபரங்கள், குடும்பப் பின்னணி, வீடு பற்றி விபரங்கள், செயற்கைக்கோள் படங்கள் மட்டுமன்றி மின்சாரம், வீதி வலையமைப்பு, குடிநீர், கழிவுநீர் அகற்றும் வசதிகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்தத் தகவல் திரட்டு அமையவுள்ளது.
இந்த விபரங்களை திரட்டுவதற்கு களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 140 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் கம்பகா மாவட்டத்தில் முதலில் நடைமுறைப்படுத்தப்படும்.
உயர்மட்ட அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் தகவல் திரட்டும் பணி மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டம் நிறைவடைந்ததும், திரட்டப்பட்ட தகவல்கள் முக்கியமான அரசாங்க நிறுவனங்களுக்கும், ஏனைய இராணுவ அமைப்புகளுக்கும், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வழங்கப்படும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment