உலகத்தின் சிறந்த பொருளாதாரம் உள்ள நாடுகளை AAA என்ற மூன்று ஏ தரத்தில் அடக்குவார்கள். 1917ல் இருந்து இந்த அதி உயர்ந்த நிலையை விட்டு அமெரிக்கா கீழே இறங்கியது கிடையாது. ஆனால் இந்த வாரம் முதல் தடவையாக அமெரிக்க கடன் பெறுமதி இறக்கம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை AA+ என்ற நிலைக்கு இறக்கியுள்ளது.
இந்த இறக்கம் பொருளாதாரத்தின் பின்னடைவு, அதில் இருந்து மீண்டுவிடலாம் என்ற வாதங்கள் காலவதியாகிப் போன வாதங்களாகும். அமெரிக்கா உட்பட மேலை நாடுகளில் கடந்த சுமார் ஒரு நூற்றாண்டுகால பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது என்பதுதான்.
பொற்காலத்தின் வீழ்ச்சி என்றால் என்ன…?
இதை விளங்கிக் கொள்ள ஸ்பானிய நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம்.. அந்த நாடு குடியேற்ற நாடுகளை அமைத்தபோது உழைக்காமலே தங்கம் கொட்டும் நாடாக மாறியது. ஒரு நூற்றாண்டு காலம் அந்த நாட்டு மக்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்து, சுகித்து மகிழ்ந்தார்கள். ஆனால் இந்தப் பொற்காலம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை திட்டமிட மறந்தார்கள். பெரும் பொருளாதார சுழிக்குள் சிக்குப்பட்டு ஸ்பானிய பேரரசே அழிந்தது.
தமிழிலும் இதற்கு நல்ல உதாரணம் உண்டு. இந்தியாவில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் சோழர்களின் ஆட்சி பொற்காலமாக இருந்தது. கங்கையில் புலிக்கொடி ஏற்றி, கடாரம் வென்று, தஞ்சைப் பெரிய கோயில் அமைத்து பொற்காலம் கண்டனர் சோழர்கள். பொற்காலத்தில் வீழ்ச்சி வந்தால் மாற்றுத்திட்டம் என்னவென்று தெரியாத சோழர்கள் இறுதியில் அழிவடைந்தார்கள். 77 வருடங்களாக ஆட்சி செய்த இலங்கையைக் கூட சிங்களவரிடம் பறிகொடுக்குமளவுக்கு வீழ்ந்தார்கள், அழிந்தார்கள்.
இதுபோன்ற வீழ்ச்சியே இன்று அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் டபிள் டிப் என்னும் இரட்டைப் பாதாளத்தில் விழப்போவதை சரியாக மட்டுக்கட்டாமல் கொள்கைகளை வகுத்து இன்று பொருளாதாரத்தை குறுக வைத்துள்ளார்கள் மேலைநாடுகளின் தலைவர்கள். மீதம் பிடிக்க, வர்த்தகத்தில் குறுக்கம் ஏற்பட பொருளாதார விஷச்சுழர்ச்சி உட்பக்கமாக சுழன்று பாதளத்திற்குள் சிக்குண்டுள்ளது.
அமெரிக்காவின் பெறுமதி மிக்க பத்திரங்களை சீனா வாங்கி முதலீடு செய்திருந்தது, இப்போது அமெரிக்காவின் கடன் பெறுமதி இறக்கம் சீனாவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் நின்ற நாடொன்றின் பெறுமதி இறக்கம் முழு உலகையும் பாதிக்கும். உலகப் பொருளாதாரம் இதுவரை இல்லாத பாரதூரமான நெருக்கடிக்குள் சிக்குப்பட்டுவிட்டதாக டென்மார்க் நோர்டியா வங்கியின் பொருளியல் நிபுணர் ஜொனி போ ஜாக்கப்சன் சற்று முன் தெரிவித்தார்.
ஐரோப்பாவிலும் பல நாடுகள் வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டன. கிரேக்கம், ஐஸ்லாந்து போன்றன ஏற்கெனவே முறிவடைந்த பொருளாதாரத்தில் சேர்ந்துவிட்டன. தெற்கு ஐரோப்பிய நாடுகள் மோசமான பற்றாக்குறைக்குள் சிக்குண்டுவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 410 பில்லியாட் யூரோ பாதுகாப்பு பொதி இந்த வீழ்ச்சியை தடுக்க முடியாது என்ற குரல்கள் கேட்கின்றன.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி நம்மை பாதிக்காது என்று இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிகப்பெரிய முதலீடுகளை அமெரிக்கா செய்துள்ளது. இந்தியாவில் இதன் தாக்கங்கள் விரைவில் தெரியவரும். பிரணாப் முகர்ஜி போல தகுதி குறைந்த அமைச்சர்களின் குரல்கள் செல்லாக்காசு குரல்கள் என்பதை வரும் இந்தியத் தேர்தல் உணர்த்தும்.
அமெரிக்கப் பொருளாதாரம் யூதர்களின் கைகளில்தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட தாக்கம் நேற்று இஸ்ரேலில் பிரதிபலித்தது. சுமார் 7.7 மில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாட்டில் சுமார் 2.5 லட்சம் மக்கள் பலத்த ஆர்பாட்டங்களை நடாத்தினார்கள், விலைக்குறைப்பு, பொருளாதார மீட்சிக்காக. இதே தாக்கம் ஜப்பானில் பட்டு, அங்கிருந்து தென்னாசியாவுக்குள் தெறிப்படையும்.
இந்த டபிள் டிப்பில் இருந்து மீள்வதற்காக எகிப்து, ரூனீசியா, லிபியா, ஏமன் போன்ற நாடுகள் சூறையாடப்பட்டுவிட்டன. மக்கள் ஜனநாயகப் போராட்டம் என்ற போர்வையில் இது உலகில் பல நாடுகளின் செல்வங்களை சூறையாட ஆரம்பித்துள்ளது. கொஸ்னி முபாரக், கடாபி போன்றவர்களின் பல பில்லியாட் சொத்துக்களை உவிந்து குடித்துவிட்டது. இந்தத் தலைவர்களை உருவேற்றி பொது மக்கள் பணத்தை சூறையாட வைத்து, அவை முதிர்வடைய கதையை முடித்து, பணத்தை பறித்துவிட்டார்கள். இந்த நாடுகளின் செல்வங்களை பொருளாதார வெற்றிடம் உவிந்துவிட்டது. இதன் குடல் நீண்டு செல்கிறது பெரும் பசியோடு. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றன வகுத்த பொருளாதாரக் கொள்கை தோல்வியடைந்துள்ளதால் வந்த வினையே இது.
இந்த நேரம் நாம் ஓர் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். உலகத்தில் ஒரு சில நாடுகள் மட்டுமே உண்மையான நாடுகளாகும். ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் பல பீஸ்ரன்ற் உதவியில் இயங்கும் ஒட்டுண்ணி நாடுகளேயாகும். மேலை நாடுகளின் பணம் இல்லாவிட்டால் இவை நாடுகளாக இருக்க முடியாது. அமெரிக்காவின் இந்த வீழ்ச்சி ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பெரும் வறுமையை ஏற்படுத்தும். இப்போது பட்டினியில் மரணித்துக் கொண்டிருக்கும் 12 மில்லியன் ஆபிரிக்க மக்களின் நிலை இதற்கு ஓர் உதாரணம்.
இந்த பொருளாதார வீழ்ச்சி புலம் பெயர் தமிழ் மக்களையும் பாதிக்கும். தூரப் பார்வையற்ற நகர்வுகளை அவர்கள் மேற்கொண்டால் பெரும் பொறிக்குள் சிக்க நேரிடும். தீக்கோழி நிலத்திற்குள் தலையை புதைத்து வைத்துக் கொண்டு உலகம் தெரியாது வாழ்வது போல அவர்களுடைய வாழ்வை நம் ஊடகங்கள் கனவில் வைத்து, மானையும் மயிலையும் ஆட வைக்கின்றன. சிறீலங்கா முதலீடுகள், இந்திய முதலீடுகள் போன்றவற்றிலும் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும். முபாரக், கடாபி சொத்துக்களை கபளீகாரம் செய்தது போல புலம் பெயர் தமிழர் முதலீடுகளை இலங்கை இந்திய நாடுகள் உவியக்கூடிய நிலை இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும். ஐயாயிரம் ரூபாவை ஒருவருக்கு கொடுத்தாலே யார் அனுப்பியது என்று சிறீலங்கா உளவுப்பிரிவு கேட்கிறது.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேலை நாடுகளின் பொற்காலத்தை பயன்படுத்தி வாழ்ந்த புலம் பெயர் தமிழர் தற்போது அதன் பொற்காலத்தின் வீழ்ச்சிக்குள் தாமும் சிக்குப்படுவோம் என்பதை அறிந்து நடக்கவோ, அவர்களுக்கு வழிகாட்ட அறிவுள்ள தலைவர்களோ இருக்கவில்லை. ஆகவே இந்த விவகாரத்தை இனியாவது உன்னிப்பாக அவதானிப்பது நல்லது.
அலைகள்


No comments:
Post a Comment