2009ம் ஆண்டில் சர்வதேசம் செய்த சதியால் ஈழத் தமிழினத்தின் வீரம் பலாத்காரமாக பறிக்கப்பட்டது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொலலப்பட்டு, அவர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் போராளிகள் விசமத்தனமான முறையில் அழிக்கப்பட்டார்கள்.அந்த வீரர்கள் தந்திரமான முறையில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்ட போது உலகம் ஒரே பக்கத்தில் நின்றது.
ஒரு இனம் அல்லது நாடு அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் அவசியமானது என்று பிரச்சாரம் செய்து வந்த நாடுகள் கூட நமது வீரத்தை பறிப்பதற்கு ஒன்றாகப் பறந்து வந்து இலங்கை அரசாங்கத்திற்கு உதவிக் கரம் நீட்டி நின்றன. இது இன்னும் தொடருகின்ற ஒரு கொடுமையாகி விட்டது.
நமது மக்கள் சிதைக்கப்பட்டு எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகம் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கக் கூடாது என்ற நோக்கத்தோடு செயற்பட ஆரம்பித்து விட்டது.
ஆமாம்! நமது மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்ற காரணத்தால் ஒரு போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற வலுவான பிரச்சாரம் நமது மக்களின் அமைப்புக்களால் துரிதப்படுத்தப்பட்டு வரும் இந்த வேளையில், தமிழ் மக்கள் மீதான போர்க்குற்றங்களை புரிந்தார் என்று நமது மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மகிந்த'வைக் காப்பாற்ற இந்த சர்வதேசம் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நிற்கின்றது.
நமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுக்குச் சென்று நமது மக்களின் குறைகளைக் கூட தெரிவிக்க முடியாமல் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் கடந்த வாரங்களில் காணக் கூடியதாக இருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் பொய்யான பிரச்சாரத்திற்கு செவிகளை திருப்பி நின்று அந்த கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகயிருக்கும் மகிந்த'வையும் இலங்கையையும் தாம் காப்பாற்ற பின்நிற்க மாட்டோம் என்று சத்தமிடும் நாடுகளையும் நாம் பார்க்கின்றோம்.
உதாரணமாக சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் அண்மைக் காலங்களில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பல காரியங்களில் ஈடுபட்ட வண்ணமுள்ளன.
இதற்கு காரணம் இலங்கையுடன் உள்ள பிராந்திய உறவா அல்லது வர்த்தகம் சார்ந்த உறவா என்று எம்மால் வகையிட முடியாது உள்ளது.
அமெரிக்கா நமது பக்கம் என்று நாம் உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது.
அமெரிக்காவோ அன்றி வேறு நாடுகளோ பாதி;க்கப்பட்ட நமது மக்கள் பக்கம் நிற்காவிட்டாலும் பரவாயில்லை, நீதியின் பக்கம் நிற்கவேண்டும் என்றே உலகெங்கினும் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இதற்கு மேலாக நாம் முன்னர் குறிப்பிட்ட ரஷ்யா, சீனா, வியட்னாம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த'வையும் இலங்கையையும் காப்பாற்ற முனைவதும் மீண்டும் ஈழத்தமிழர்களை சிதைக்க எண்ணும் அவர்களது சிந்தனை என்றே உதயன் வலியுறுத்துகின்றான்.
கனடா உதயன் கதிரோட்டம்


No comments:
Post a Comment