
சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் ஆலோசனை நடத்தி வருவதாக ஐ.நா தகவல் ஒன்று கூறுகிறது.
ஐ.நாவின் பிராந்திய தகவல் நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் சொந்தமான விசாரணைகளை நடத்தாத நிலையில், வெளியார் தலையிடுவதை விரும்பவில்லை என்றும், அனைத்துலக விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 12ம் நாள் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கும் அனுப்பியிருந்தார்.
சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு குற்றங்களுக்கு பொறுப்புக் கூறப்படுவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதும் அவசியமானது என்று ஐ.நா பொதுச்செயலர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் 23ம் நாள் சிறிலங்கா அதிபரை சந்தித்த போதும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், பொறுப்புக் கூறும் நம்பகமான தேசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் ஐ.நா தகவல் கூறியுள்ளது.
இந்தநிலையிலேயே, சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரும் முடிவு செய்யவுள்ளதாக ஐ.நா தகவல் மேலும் கூறியுள்ளது.


No comments:
Post a Comment