
சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை கற்கைநெறியைப் பயிலும் அதிகாரிகள் குழுவே வன்னிக்குச் சென்றுள்ளது.
இந்திய விமானப்படையின் அதிகாரியான எயர் கொமடோர் பி.ஆர்.நவல்கர் தலைமையிலான இந்தக் குழுவில் 16 இந்திய இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆறுநாள் பயணத்தின் ஒரு கட்டமாக இந்தக் குழுவினர் வன்னிப் படைகளின் தலைமையகம், ஆட்டிலறிப் பாடசாலை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், மற்றும் பல தொல்பொருள் ஆய்வு, வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் சென்றுள்ளனர்.
நேற்று இந்தக் குழுவினர் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்குச் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு நேற்று சந்திக்கவுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இந்தியப்படை அதிகாரிகள் குழு சென்றபோது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க இவர்களைச் சந்திக்கவில்லை என்று மற்றொரு தகவல் கூறுகிறது.
சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஜெயந்த பேரேராவே இவர்களை வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை சிறிலங்கா கடற்படை எவ்வாறு தோற்கடித்தது என்பது பற்றி, றியர் அட்மிரல் ஜெயந்த பெரேரா விளக்கமளித்துள்ளார்.


No comments:
Post a Comment