
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவுக்கு சுவிற்சர்லாந்தின் சமஸ்டி நிர்வாக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சுவிற்சர்லாந்து உலக வானொலி தகவல் வெளியிட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சிறிலங்கா அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு குடியேற்றத்துக்கான சுவிஸ் சமஸ்டி பணியகம் முடிவு செய்திருந்தது.
ஆனால் திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக சமஸ்டி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இநத வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2009இல் சிறிலங்கா இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறிலங்காவில் பாதுகாப்பு நிலைமைகள் பொதுவாக முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், உறுதிநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதனால் அகதிகளை திருப்பி அனுப்பலாம் என்றும் சுவிற்சர்லாந்து நீதிமன்றம் கூறியுள்ளது.
சுவிற்சர்லாந்து நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


No comments:
Post a Comment