
மின்னல் தாக்குதல்களினால் கடந்த 10 மாதங்களில் 46 பேர் பலியாகியுள்ள நிலையில் இலங்கை வரலாற்றில் மின்னல் தாக்குதல்களினால் பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வருடமே அதிகளவில் இடம்பெறும் நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மின்னல் தாக்குதல்களினால் 1997 ஆம் ஆண்டே அதிகளவாக 47 பேர் பலியாகியிருந்தனர்.ஆனால், இவ்வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மின்னல் தாக்குதல்களினால் 46 பேர் பலியானமை தொடர்பிலேயே வானிலை அவதான நிலையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிங்கிரியாவில் 8 வயதுடைய சிறுமியொருவர் மின்னல் தாக்குதலில் பலியானதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை இவ்வருடத்தில் 46 ஆகவுள்ளது. இச்சிறுமி மீது அண்டனா வயர் ஊடாகவே மின்னல் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
நாட்டில் மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ,நவம்பர் காலப்பகுதிகளில் இடை நிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காணப்படுவது வழமையாகும். இதன்போது மெதுவான காற்றின் காரணமாக மின்னலின் தாக்கம் அதிகரிப்பதாகவும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை நாட்டின் அநேகமான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பிற்பகல் மற்றும் இரவு வேளையில் பெய்யும் நிலையுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியான கே.சூரியகுமார் தெரிவித்தார்.
அத்துடன் சில நேரங்களில் சில இடங்களில் பாரிய மழைபெய்யுமெனவும் தெரிவித்த அவர் கிழக்கு, வடக்கு பிராந்தியத்தின் சில பகுதிகள் மற்றும் தெற்கு,மேற்கு கரையோர பிரதேசங்களில் காலையில் மழை பெய்யும் சூழ்நிலையுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment