
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்ற தமிழின உணர்வாளரும் நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினரின் சதிநடவடிக்கையால் அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிகையில்.. தமிழகத்தில் தமிழ்த்தேசியத் தளத்தை வீச்சுக் குறையாமல் கொண்டுசெல்வதில் முக்கிய பங்காற்றிவருபவரும் நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான செந்தமிழன் சீமான் அவர்களும் வழக்கறிஞர் தடா.சந்திரசேகரும் அமெரிக்கா சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஈழத்தமிழ் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்ற வேளையிலேயே விமான நிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
செந்தமிழன் சீமான் அமெரிக்க விமானநிலையத்தில் இறங்கியவுடன் விசாரனைக்காக தடுத்து நிறுத்திய விமானநிலைய அதிகாரிகள் ஒரு மணிநேர விசாரனைக்குப்பின்னர் உங்களை நாட்டிற்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பியணுப்பியுள்ளனர்.
இதேவேளை தனித்தனியாக பயணத்தை மேற்கொண்டிருந்தபடியால் தடா.சந்திரசேகர் அமெரிக்காவிற்குள் பிரவேசித்துவிட்டதாகவும் அமெரிக்காவினுள் உள்நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட செந்தமிழன் சீமான் அவர்கள் நாடுதிரும்பிக் கொண்டு இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இப்படியான இடையூறுகள் ஏற்படும் என்ற காரணத்தினால்தான் மிகவும் இரகசியமாக இந்த பயணஏற்பாட்டினை சீமான் தரப்பினர் மேற்கொண்டிருந்தனர். அத்துடன் அமெரிக்காவிலும் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எவ்வித அறிவித்தல்களும் வெளியிடப்படாதிருந்தது.
அப்படி இருந்தும் இந்தப் பயணத்தினை மோப்பம் பிடித்த இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினர் இறுதிக்கட்டத்தில் தலையிட்டு அமெரிக்காவினுள் செல்லவிடாது விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பிவிட்டார்கள். இவ்வாறே கடந்த ஆண்டும் கனடாவில் நடைபெற இருந்த மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வில் பங்கேற்கச் சென்ற செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னரான காலகட்டத்தில் தேசியத்தலைவரது வெளிப்பாடு இல்லாத நிலையில் புலத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு நிலைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உளச்சோர்வு நிலைக்கும் மருந்திடும் ஆற்றலை கொண்ட செந்தமிழன் சீமான் அவர்களது பயணங்கள் இந்திய-சிறிலங்கா உளவுத்துறையினரால் திட்டமிட்டு தடுக்கப்படுகின்றது.
முறையாக விசாவிற்கு விண்ணப்பித்து பெறப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்புவது என்பது ஏற்புடையது அல்ல. நாட்டிற்குள் அனுமதிக்க முடியாதவர்களை தவிர்ப்பதற்காகவே விசாவிற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கும் முறை உள்ளது. விசாவிற்கான விண்ணப்பம் அளிக்கப்பட்ட பின்னர் அதனை பரிசீலிக்கும் காலகட்டத்தில் குறித்த நபர்கள் தொடர்பாக ஆராயப்பட்டே விசா அனுமதி வழங்கப்படுகின்றது. அப்படி இருந்தும் பயணிப்பதற்கு அனுமதித்துவிட்டு விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்புவது என்பது கண்டிக்கத்தக்கதே.
இந்திய அரசின் கபடத்தனத்தால் இந்தியாவிற்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் நுழைவதற்கு அனுமதித்துவிட்டு இறுதி நேரத்தில் விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பும் பாணியிலேயே செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் வைத்து தேசத்தாய் பார்வதியம்மாள் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு கூட அனுமதிமறுக்கப்பட்டு கருணாநிதி ஆட்சியில் திருப்பியனுப்பியிருந்தமையும் தற்போது உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும் அதே விதத்தில் திருப்பியனுப்பப்பட்டிருந்தனர்.
சினிமா நாயகர்களுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் ஏற்படும் இடையூறுகளிற்கெல்லாம் கொதித்தெழுபவர்கள் இன விடுதலைக்கான பயணத்தை மேற்கொண்ட செந்தமிழன் சீமானை திருப்பியனுப்பியதை கண்டிப்பார்களா...?


No comments:
Post a Comment