கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வயோதிபப்பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கழுத்தில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டக்கச்சிப்பகுதியில் கடந்த மூன்று தினங்களில் இது இரண்டாவது கொலைச் சம்பவம் ஆகும். வட்டக்கச்சி கட்சன் வீதியைச்சேர்ந்த குமார்ராஜா கொலன் மேரி திரேசா (வயது63) என்ற வயோதிபப் பெண்மணியே கொலையுண்டவர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது பிரஸ்தாப பெண் கிளிநொச்சி கட்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றில் உடல் நோய்வாய்ப்பட்ட அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் எதிர் வீட்டில் வவுனியாவிலிருந்து ஹைஏஸ் வாகனத்தில் வந்த மூவர் தாங்கியுள்ளனர். மூவரில் ஒருவர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு இரவு சென்று அவர்களுடன் உரையாடிவிட்டு அங்கேயே தங்கியுள்ளார். நேற்று அதிகாலை அயலில் உள்ளவர்கள் குறித்த பெண்வீட்டுக்கு வழமை போல் உதவிக்காக சென்ற வேளையில் அவர் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி பெ. சிவகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். நீதிவானின் உத்தரவுப்படி சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹைஏஸ் வாகனத்தில் வந்த மூவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.பொலிசார் மேற்கொணட தீவிர விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து கொலையுண்ட பெண்ணின் கவரிங் சங்கிலி மற்றும் பவுண்காப்பு, தோடு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை இரவும் வட்டக்கச்சி மாயவனூர் சிவன் கோயிலடிப் பகுதியில் வீட்டில் படுத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் ஆயுததாரிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வீட்டு உரிமையாளரான பெண் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.திருமலையைச் சேர்ந்த தம்பிராஜா சௌந்தர் ராஜன் என்பவரே கொலையுண்டவர் ஆவார்


No comments:
Post a Comment