அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் 28 30 காலப்பகுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையிலும், இலங்கை விவகாரத்தில் அங்கத்துவ நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் இறுதியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அழுத்தம் கொடுத்து வருகின்றார். மேற்படி உச்சிமாநாட்டில கேள்வியெழுப்பவுள்ளதாகவும் இலங்கையின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவையாக அமையாதுவிடின், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய கூட்டத்தை தான் பகிஷ்கரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது தொடர்பாடல்கள் இணை இயக்குனரான அன்ட்ரு மக்டோகல் கருத்து வெளியிடுகையில், பொதுநலவாய மாநாட்டில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றை நாம் எதிர்ப்பார்ப்பதுடன், பிரதமர் தனது நிலைப்பாட்டை அப்போது தெளிவுபடுத்துவார். ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இனங்கள் பற்றிய ஊடகவியலாளர் சிலருடன் நடாத்தியிருந்த வட்ட மேசை மாநாடொன்றில் தெரிவித்திருந்த கருத்துக்களில் தொடர்ந்தும் மனவுறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
அந்தக் கூட்டத்திலேயே 2013 இல் பொது நலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த அனுமதி அளிப்பது மற்றும் இலங்கை அரசால் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனிதவுரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஆகியவை கனடாவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு ஹார்பர் பதிலளித்திருந்தமை தெரிந்தே.
பொதுநலவாய மாநாட்டின் போது இது குறித்து நான் தெளிவுப்படுத்தலாமென எண்ணியுள்ளேன். மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் நடவடிக்கை முன்னேற்றம் காணப்படாதவிடத்து, 2013 இல் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் நான் கனடாவின் பிரதமராகக் கலந்து கொள்ள மாட்டேன். ஏனைய நாட்டுத் தலைவர்களும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருப்பரென நம்புகிறேன். பொருத்தமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்ற அழுத்தத்தை இது இலங்கைக்கு கொடுக்குமெனவும் நான் நம்புகின்றேன் எனவும் ஹாப்பர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புலிகளுக்கெதிராகப் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கு உதவுவதுடன் மட்டுமன்றி, இலங்கையில் அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை பற்றிய விடயங்களில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்திக் கூறிய அவர், இலங்கை அரசு படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராகச் சுமத்தியுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்ற ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரையை தான் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில் பிரதமர் தெரிவித்திருந்த கருத்துக்களில் எந்தவித மாற்றமும் இல்லையெனக் கூறிய மக்டோகல், 54 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பு ஜனநாயக சீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை கட்டியெழுப்புவதில் ஆதரவளித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து பொதுநலவாய உச்சி மாநாட்டில் விவாதிப்பதை தனது நாடு விரும்பவில்லையென கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்திராங்கனி வாசிஸ்வரா போஸ்ட் மீடியா செய்திச் சேவைக்கு கடந்த வெள்ளியன்று அளித்த செவ்வியில் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பேர்த்தில் நடைபெறும் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கனடாவும் ,தனை ஆமோதிக்குமென நான் நம்புகின்றேன். இது பற்றி இறுதித்தீர்மானம் எடுப்பது கனடாவைப் பொறுத்ததே. அத்துடன் கடந்த 2009 இல் கூடிய பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்கள், எதிர்வரும் 2013 க்கான தங்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல எனக் கூறிய அவர், இலங்கை அரசு புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை எடுத்திருந்ததெனவும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment