தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment