கடந்த இரண்டு வாரங்களாக ஆங்கில, சிங்கள ஊடகங்களில் முன்பக்கச் செய்தியாகவும் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்த கொண்டிருக்கும் விடயம் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) என்னும் மக்கள் விடுதலை முன்னணி
பற்றியதாகும். ஜே.வி.பி.க்குள் தற்போது உட்கட்சி கருத்து முரண்பாடுகள் புயலாகக் கிளம்பி முழுக் கட்சி அமைப்புகளையும் உலுப்பி வருகின்றது. அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும் போது கட்சிக்குள் பெரும் கருத்து முரண்பாடு எதுவும் இல்லை என்றும் அமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையே சிறிய அளவில் இருந்து வருவதாகவும் ஒரு வகைப் பூசி மெழுகலைச் செய்து வருகிறார். ஆனால், "கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்தேயாக வேண்டும்' என்பது போன்று எவ்வளவிற்கு மூடிக்கட்டினாலும் ஜே.வி.பி.க்குள் உருவாகியுள்ள கருத்து முரண்பாடுகள் மறைக்க முடியாத நிலையில் அரங்கத்திற்கு வந்துள்ளன.
தற்போது ஜே.வி.பி.க்குள் உருவாகியுள்ள உட்கட்சி நெருக்கடியை எவ்வாறு தத்தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் பல்வேறு தரப்பினரும் தீவிரமாகியுள்ளனர். அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சி, பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்கள் போன்றன ஜே.வி.பி.தற்போதைய உட்கட்சி முரண்பாட்டால் உடைந்த நொருங்கிப் போவதையே விரும்புகின்றன என்பது உள்ளார்த்தமாக இருந்து வருகின்ற உண்மையாகும். அரசாங்கம் தன்னை விரல் நீட்டிக் கடுமையாக விமர்சிப்பதில் ஜே.வி.பி. முன்நிற்பதை மட்டுமன்றி அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி அழுத்தம் தரும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடிய நிலையில் இருந்து வருவதையும் அரசாங்கம் சகித்துக்கொள்வதற்குத் தயக்கமில்லாத நிலையிலேயே இருந்தும் வருகிறது. ஏற்கனவே நன்கு திட்டமிட்ட வகையில் ஜே.வி.பி.யை உடைத்துப் பிளவுபடுத்திய அரசாங்கம் தற்போதைய சூழலில் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கமாட்டாது. அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியானது தன்னையும் மீறிய நிலையில் ஜே.வி.பி. ஒரு அரசாங்க எதிர்ப்பு நிலைக் கட்சியாக வளர்வதைக் காணவிரும்பமாட்டாது. குறிப்பாக அரசாங்க எதிர்ப்பான வாக்கு வங்கியை ஜே.வி.பி. தனதாக்கிக் கொள்வதை எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைத்துவமும் உள்வாங்கிக் கொள்ள மாட்டாது. எனவே ஜே.வி.பி.பிளவுபட்டு பலமிழந்து போவதையே அக்கட்சி ஊக்கப்படுத்திக்கொள்ளும்.
அவர்களது விருப்பங்களையே இந்த வாரத்தில் ஆங்கில, சிங்கள ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டன. ஜே.வி.பி.க்குள் அதிருப்தியாளர்கள் தீவிரவாதப் பாதைக்குச் செல்லப் போகிறார்கள் என்றும் ஆயுதப் போராட்டம் நடத்தும் நோக்கமுடையவர்கள் என்றும் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அத்துடன் வழமையான இன வாதத்தையும் எழுத்தாக்கத் தவறவில்லை. தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையில் கட்சி சரியாக நடந்துகொள்ளவில்லை என்றவாறு கட்சித் தலைமையில் குற்றம் காண்பதாகவும் இனச்சாயம் பூசும் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகின்றன. அதற்கு மகுடம் வைத்தாற் போன்று அதிருப்தியாளர்களுக்கு ஒரு தமிழர் தலைமை தாங்குவதாகவும் துலக்கம் காட்டி எழுதுவதில் அவ் ஊடகங்கள் தவறவில்லை. அவற்றின் விருப்பம் யாவும் ஜே.வி.பி. உடைந்து போக வேண்டும் என்பதேயாகும். அதற்கு அடிப்படைக் காரணம் ஜே.வி.பி. பெயரளவில் தானும் சிகப்பும் அரிவாள், சம்மட்டியும் கொண்டு இடதுசாரிக் கோலம் காட்டி வருவதைக் கூட அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.
இத்தகைய நிலையில் ஜே.வி.பி.க்குள் இடம்பெற்று வரும் கொள்கையடிப்படையிலான உட்கட்சிப் போராட்டம் பற்றி சற்று உட்சென்று பார்க்க வேண்டியது தேவையாகிறது. ஆயுதக் கிளர்ச்சியிலும் பாராளுமன்றப் பாதையிலும் மாறி மாறிப் பயணித்து வந்த ஒரு கட்சியே ஜே.வி.பி.யாகும். அதன் ஆரம்பமே ஒரு இரகசிய இளைஞர் இயக்கமாகவே 1965 இல் தொடங்கப்பட்டதாகும். அவ்வேளை அதன் நிறுவுனரான ரோகண விஜயவீரா,நா.சண்முகதாசன் பிரேம்லால் குமாரசிறி தலைமையிலான புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் வாலிபர் இயக்கத்திலும் தீவிர செயற்பாட்டாளராக இருந்து வந்தார். அவ்வேளை அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒன்று கட்சித் தலைமைக்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் மாற்றுக் குழு உருவாக்கியமை இரண்டாவது 1966 ஆம் ஆண்டின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகள் கலந்துகொண்ட இனவாத ஊர்வலத்தில்கலந்து கொண்டமை,இவற்றால் விஜவீரா கட்சியில் இருந்தும் இளைஞர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.அதன் பின் தனது இரகசியக் குழு வேலையைத் தெற்கில் தீவிரப்படுத்தியும் கொண்டார். இளைஞர், யுவதிகளை மையமாகக்கொண்ட கிளர்ச்சியையும் அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் நோக்காகக்கொண்டே ஜே.வி.பி.யை விஜயவீரா தலைமைதாங்கினார்.அதற்காக ஐந்து அரசியல் வகுப்புகளையும் நடத்தினார். அதில் ஒரு வகுப்பானது மலையக மக்களுக்கு எதிரான கருத்துக் கொண்டதாக இருந்ததுடன் அன்றைய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நா.சண்முகதாசன் தமிழராக இருப்பதால் சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகரக் கருத்துகளைக் கொண்டு செல்ல முடியாது என்ற இனவாத நஞ்சையும் இளைஞர் மத்தியில் பரப்பிக் கொண்டார். அதன் தொடர்ச்சி தான் ஜே.வி.பி.க்குள் இன்றுவரை இனவாதம் நீடிப்பதாகும்.
இத்தகைய நிலையில் வறுமை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, நிலமின்மை போன்ற அடிப்படைப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து நின்ற சிங்கள இளைஞர் யுவதிகளை அணிதிரட்டி ஒரே நேரத்தில் புரட்சி செய்யப் புறப்பட்டே 1971 ஏப்ரல் கிளர்ச்சியை ஜே.வி.பி.யும் விஜயவீராயும் முன்னெடுத்தனர். அதில் தோல்வி கண்டு சிறை இருந்து இருபதினாயிரம் இளம் உயிர்களையும் பலிகொடுத்த விஜயவீர பின்பு பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பி குறிப்பிட்ட காலத்தின் பின் 198889 காலப்பகுதியில் மீண்டும் தலைமறைவாக இருந்து ஆயுதக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவ்வேளை 1989 இல் ஆர். பிரேமதாஸா ஜனாதிபதியாகியதுடன் அவரது தலைமையிலான ஆயுதப்படைகள் ஜே.வி.பி.யைத் துடைத்தெறிவதில் முன்னின்றன.விஜயவீராவும் ஜே.வி.பி.யின் மத்திய குழுவும் முற்றாகவே அழிக்கப்பட்டது. அதில் உயிர் தப்பிய ஒரே ஒரு மத்தியகுழு உறுப்பினரே தற்போதைய தலைவராக உள்ள சோமவன்ச அமரசிங்கவாகும்.அவர் தப்பியோடி பிரிட்டனில் அஞ்ஞாதவாசத்தைப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தார். விஜயவீராவும் ஜே.வி.பியும் நடத்திய இரண்டு கிளர்ச்சிகளிலும் சிங்கள இளைஞர்,யுவதிகள் மக்கள் என்போர் ஒரு இலட்சத்திற்கு மேல் கொன்றழிக்கப்பட்டனர் என்பது என்றும் மறக்க முடியாது அன்று சிங்கள மக்கள் மத்தியில் இரத்தக் குளிப்பு நடத்திய அதே ஆயுதப் படைகள்தான் முப்பது வருட யுத்தத்தில் வடக்கு கிழக்கில் ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை பலிகொண்டன என்பதும் வரலாற்றுப் பதிவாகும்.
இத்தகைய ஜே.வி.பி. மீண்டும் தன்னை அரசியல் அரங்கிற்கு கொண்டுவந்து தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்பு,மாதர் அமைப்பு,இளைஞர் அமைப்புகளையும் நிறுவிக்கொண்டது.விஜயவீரா கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிர் தப்பிய ஒரே ஒரு மத்திய குழு உறுப்பினர் என்ற ஒரே தகுதியுடன் சோமவன்ச அமரசிங்கா ஜே.வி.பி. தலைவராகியதுடன் சந்திரிகாவின் ஜனாதிபதிக் காலத்தில் நாடு திரும்பியும் கொண்டார். 1989 க்கு பின்னான காலத்தைச் சேர்ந்த ரில்வின் சில்வா பொதுச் செயலாளராகவும் அதிரடி மேடைப்பேச்சு வல்லவரான விமல் வீரவன்ச பிரசாரச்செயலாளராகவும் செயல்பட ஜே.வி.பி. பாராளுமன்ற அரங்கில் உச்சத்தைத் தொட்டு முப்பத்தியெட்டு ஆசனங்களை சந்திரிகா அரசாங்கத்தரப்புடன் கூட்டு வைத்துப் பெற்றுக் கொண்டது.
2004 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனையை வடிவமைப்பதில் ஜே.வி.பி. அதிக உரிமைகோரி நின்றதுடன் யுத்தத்தைத் தீவிரமாக முன்னெடுப்பதிலும் முன்நிலை வகித்தது. பிரிவினையையும் புலிகள் இயக்கத்தையும் எதிர்த்த அதேவேளை தமிழ் மக்கள் எதிர்நோக்கிய தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றும் அரசியல் தீர்வு தேவையற்றது எனவும் பிரசாரம் செய்தனர். இதனால் சிகப்புப் பேரினவாத இயக்கமே ஜே.வி.பி. எனத் தமிழ் மக்களும் நேர்மையான இடதுசாரி இயக்கத்தினரும் குற்றம் சாட்டிவந்தனர். அது மட்டுமன்றி ஒவ்வொரு மேதினத்திலும் மாக்ஸ் ஏங்கல்ஸ், லெனின் ஆகியோரது படங்களையும் அரிவாள் சம்மட்டியையும் செஞ்சட்டைகளையும் கொடிகளையும் தாங்கித் தம்மை தீவிர இடதுசாரி சக்திகளாகவும் அடையாளம் காட்டிக்கொண்டனர்.இவை ஒருவகைப் பம்மாத்தாகவே இருந்து வந்தது.
அதேவேளை, ஜே.வி.பி.யை ஒரு நேர்மையான இடதுசாரிக் கட்சியாகவும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய கட்டமைப்பும் அதற்கான கொள்கையும் இருப்பதாக நம்பிய தெற்கின் இளைஞர், யுவதிகள் அதன் பின்னர் அணிதிரண்டனர். சிங்கள மக்கள் மத்தியில் பாராளுமன்ற பாரம்பரிய இடதுசாரிகளான சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வெகுஜனங்களுக்கும் தமது புறமுதுகைக்காட்டித் துரோகம் இழைத்துக் கொண்டனர் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அவர்கள் ஆளும் வர்க்க முதலாளித்துவப் பேரினவாதிகளுடன் சங்கமமாகிக் கொண்ட சூழலில் இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்தவர்களும் இடதுசாரிப் போக்கை விரும்பிய இளைஞர், யுவதிகளும் ஜே.வி.பி.யை நாடிச் சென்றதில் வியப்பேதுமில்லை.அதேவேளை நம்பிச் சென்ற இளம் தலைமுறையினருக்கும் மக்களுக்கும் அரசியல் நேர்மை உடைய கட்சியாக இருக்கவில்லை.
அதனால் தற்போதைய தலைமையானது பாராளுமன்றப்பாதையில் பயணித்து அதில் பங்கும் பயனும் பெற்று சுகம் அனுபவிப்பவர்களாகிக் கொண்டனர்.பழைய சீரழிந்த சமசமாஜ, கம்யூனிஸ் கட்சிகள் போன்று மலர்த்தட்டு ஏந்தி விகாரைகளுக்குச் சென்று கால்கள் மடித்து வணங்கியதுடன் கைகளில் நிறையப் பாதுகப்பு நூல்கள் கட்டிக் கொள்ளும் நிலைக்கும் தாழ்ந்து கொண்டனர். பௌத்த மதத்தில் சோஷலிசம் காணும் தலைமையில் உள்ள சோமவன்ச போன்றோர் தொழிலாளிவர்க்க உணர்வு பெறுவதற்கும் அப்பால் தியானம் செய்வதில் இறங்கினர். மாக்சிசத்தை படிக்குமாறு ஒப்புக்குக் கூறிய போதிலும் சேகுவேராவை இளைஞர்கள் மத்தியில் விளம்பர நிலைப் பரப்புரை செய்தபோதிலும் தலைமை ஒரு இடது சாரித் தொழிலாளி வர்க்கக் கட்சிக்குரிய அடிப்படையில் செயற்படவில்லை என்பது நீண்ட காலக் குற்றச்சாட்டாக வெளியில் இருந்து ஜே.வி.பி. பற்றி நோக்கப்பட்டது. உதாரணமாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றி அதன் நிலைப்பாடானது முற்றிலும் மார்க்சிச விரோத நிலைப்பாடாகவே இருந்து வந்துள்ளமை குறிப்பிடக் கூடியதாகும். அதனால் வெளிநாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சில ஜே.வி.பி.யின் சிகப்புத் தோற்றத்தையும் ஆரம்பத்தில் பார்த்து அங்கீகாரம் வழங்கிய அவர்கள் காலப் போக்கில் ஜே.வி.பி.யிடமிருந்து ஒதுங்கிக் கொண்டமையும் காணத் தகுந்ததாகும்.
ஜே.வி.பி.யை நம்பிச் சென்ற நல்ல சக்திகள் காலத்திற்குக் காலம் அதிலிருந்து விலகி வெளியேறிச் சென்ற சந்தர்ப்பங்கள் அநேகம். அவ்வாறே தற்போது ஜே.வி.பியின் தலைமை மட்டத்தில் கடுமையான கருத்து வேறுபாடு தோன்றி அதிருப்தியாகியுள்ளோர் தொகை கணிசமானதாகும். தற்போதைய தலைமையான மத்திய குழுவில் 24 உறுப்பினர்களில் பன்னிரண்டு பேர் கடைசியாக நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தைப் பகிஷ்கரித்துக் கொண்டனர். இதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளடங்குவர். கட்சியின் பத்திரிகையான "லங்கா' வில் பணிபுரிந்த எண்பது வீதமானோர் அதிருப்தியாளர் குழுவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.அத்துடன் சோசலிச மாணவர் சங்கம், இளைஞர் அமைப்பு,மாதர் அமைப்புகளில் கட்சிக்குள் உருவாகியுள்ள அதிருப்தியாளர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை ஜே.வி.பி. அதிருப்தியாளர்களின் குழுவானது தலைமை மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றிக் கருத்தரங்குகள், கூட்டங்கள் சந்திப்புகளைப் பரவலாக நடத்திவருவதுடன் ஊடகங்களுக்கு தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியும் வருகின்றது. இது ஒரு பகிரங்கமான பிளவுக்கும் புதிய கட்சி ஒன்றின் தோற்றத்திற்கும் வழி வகுக்கும் என்றே நம்பப்படுகிறது. இவ் அதிருப்தியாளர் குழு கட்சிக்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது அறவே இல்லை என்று கூறுகிறது. அத்துடன் ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு இருக்கக் கூடிய ஜனநாயக மத்தியத்துவம் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும் குற்றஞ் சுமத்தப்படுகிறது. மேலும் பிரிவினை வாதத்தையும் புலிகள் இயக்கத்தையும் எதிர்த்த ஜே.வி.பி. அதற்கும் மேலாகச் சென்று யுத்தத்தை ஊக்குவித்து அரசாங்கம் யுத்தப் பாதையில் பயணிக்க உதவி கரமாகவும் திரிதூண்டியாகவும் ஜே.வி.பி. செயலாற்றி வந்தமையும் அதிருப்தியாளர்களால் கண்டனமாகக் காட்டப்படுகிறது,
மேலும் நவதாராளப் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுப்பதற்கு ஜே.வி.பி. உடந்தையாக இருந்து வருவதையும் பாராளுமன்றப் பாதையில் சுகம் அனுபவித்து வருவதையும் கேள்விக்குட்படுத்துகின்றனர். மேலும் முன்னாள் இராணுவத் தளபதியின் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதையும் அதிருப்தியாளர் குழு கடுமையாகச் சாடி நிற்கிறது. இவை பற்றி அதிருப்தியாளர் குழுவின் பேச்சாளரானபு புதுஜெயகொட தமது பக்க நியாயங்களை முன்வைத்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியிலும் சரி தமிழ் மக்களிடையேயும் சரி தேசியவாதத்தால் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று கருத்துரைத்துள்ள அதிருப்திக் குழுவின் பேச்சாளர் ஜெயகொட இடதுசாரி இயக்கம் கடந்த காலத்தில் விட்டுள்ள தவறுகள் சரியாக மதிப்படப்படவும் சுயவிமர்சனத்திற்கு உட்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே அவ்வக் காலங்களில் ஜே.வி.பி.யின் மீது அதிருப்தி கொண்டு பலர் வெளியேறித் தனிநபர்களாகவும் குழுக்களாகவும் செயற்பட்டனர். ஆனால் தென்னிலங்கையில் ஒரு மாக்சிசலெனினிசக் கட்சியாக அத்தகையோரால் வளர முடியவில்லை. அது ஏன் என்பது இவ்வேளை உரிய அரசியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வர்க்கப் போராட்ட அடிப்படையிலான ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியைச் சிங்கள மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் தேவையை ஜே.வி.பி.க்குள் உள்ள நேர்மையான சிந்தனை மிக்க சக்திகள் விரும்புகின்றன. அவ்வாறான ஒரு கட்சியின் தேவையை இவ் அதிருப்தியாளர்கள் குழு நிறைவு செய்யுமா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும். குறிப்பாக பேரினவாத நிலைப்பாடு கடந்த முற்றிலும் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை மையப்படுத்திய சமூக மாற்றத்திற்கான பாதையில் பயணிக்கக் கூடிய ஒரு கட்சி உருவாகுமா? இன்றைய அதிருப்தியாளர்களும் ஜே.வி.பி.யை விட்டு ஏற்கனவே வெளியேறிச் சென்ற நேர்மையான சக்திகளும் ஒன்றிணைந்து பாரிய சவால்களைக் கடந்து ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சியாக முன் செல்வதையே முற்போக்காளர்கள் விரும்புகிறார்கள். அதற்கான ஆரம்பமாக ஜே.வி.பி. அதிருப்தியாளர்கள் முன்செல்வார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

No comments:
Post a Comment