சென்னை உள்ளாட்சித் தேர்தலில் தனது 6வது வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதன் மூலம் அனைத்து பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக.கூட்டணிக் கட்சிகளை சற்றும் பொருட்படுத்தாமல் தனது வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுக்கொண்டுள்ளது. நேற்று மாலை தனது 6வது பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இதில் மொத்தம் 398 பேரூராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
முதலில் அனைத்து மாநகராட்சி மேயர் பதவிக்கான வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார். அடுத்து அனைத்து நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்தார். இப்போது அனைத்து பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.
இதனால் இந்த மூன்று பதவிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களே முழுமையாக போட்டியிடுகின்றனர். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு இடம் கூட தரவில்லை ஜெயலலிதா.
ஏன் இப்படி ஜெயலலிதா தொடர்ந்து பட்டியலை வெளியிட்டு வருகிறார் என்பது புரியாமல் கூட்டணிக் கட்சியினர் கடும் குழப்பத்திலும், கோபத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
நேற்று ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர் மற்றும் புறநகர், திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர், கோவை மாநகர் மற்றும் புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை மாநகர் மற்றும் புறநகர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர், புறநகர் வடக்கு மற்றும் புறநகர் தெற்கு, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான பேரூராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மொத்தம் உள்ள 529 பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் தற்போது அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இனி அடுத்து மிச்சமிருப்பது கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகள்தான்.


No comments:
Post a Comment