இம் மாநாட்டில் சிறப்புரையாற்றிய கிச்சினர் மத்திய தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் வூட்வோர்த், இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைப்பதை ஆதரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
அத்துடன், சிறீலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்பதையும் ஐ.நா. சபையினால் போர்க் குற்றவிசாரணை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
இப்படியான ஒரு தமிழ் அமைப்பு கனடியர்கள் அனைவருக்கும் சேவை செய்யும் வகையில் இருப்பதையிட்டு பெருமையடைகிறேன் என்றும் இந்த அமைப்புடன் இணைந்து வேலை செய்வதற்கு விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
100 பேராளர்கள் இருக்கக்கூடிய இந்த மண்டபத்தில் 147 பேராளர்கள் பதிவு செய்து கொண்டது இந்த மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றியது.
இந்த நகரத்தின் மேயர் தனது வரவேற்புச் செய்தியை ஜெப் ஹென்றி என்ற கவுன்சிலர் ஊடாக மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை விவகாரங்களிற்கான தொடர்பாளரான ஜோன் ஆர்க்கியூ அங்கு பேசுகையில், சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளிற்கு யுத்தக் குற்ற விசாரணை தேவை என்பதை வலியுறுத்தினார்.
லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகரான பிரையன் மே அங்கு லிபரல் கட்சியின் தலைவர் பொப் ரேயின் இந்த மாநாட்டிற்கான செய்தியினை வாசித்ததோடு சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு தீர்க்கமான விசாரணை இடம்பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டையும் தனது செய்தியில் தெரிவித்திருந்தார்.
கனடிய அமைச்சா் ஹரி குட்யியர் தனது வாழ்த்துச் செய்தியில் இந்த அமைப்பு செய்துவரும் மனிதவுரிமை விவாகரங்கள் தொடர்பான விடயங்களில் மேலும் சிறப்புறச் செய்வதற்கு தான் வாழ்த்து வழங்குவதாகவும் கனடிய அரசு மனிதவுரிமை விவகாரங்களில் நேர்மையான ஒரு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஒன்ராறியோ மாகாண அரசின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் கிறிஸ் பென்றிலி அங்கு பேசுகையில் கனடிய மனிதவுரிமை மையம் மேற்கொண்டு வரும் மனிதவுரிமை தொடர்பான பணிகளிற்கு தமது அரசு எப்போதுமே ஆதரவளித்து வரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஒன்ராறியோ மாகாணக் கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் பேசிய பொப் ஸ்ரான்லி, தமிழர்களிற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற சில போராட்டங்களால் ஏற்பட்ட பெருந்தெரு மறிப்புப் போன்ற சங்கடத்தைக் குறைக்க கனடிய மனிதவுரிமை மையம் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இம்மாநாட்டில் பேசிய கனடிய மனிதவுரிமை மையத்தின் பேச்சாளரான ரொட் றோஸ் அவர்கள் கனடிய மனிதவுரிமை மையம் தன்னாலியன்றளவு இலங்கையில் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றும் எனத் தெரிவித்தார்.


No comments:
Post a Comment