
இந்திய-சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலைக் கடற்பரப்பில் மேற்கொண்டு வந்த கூட்டுப் போர்ப்பயிற்சி ஒரு நாள் முன்னதாக- நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
போர்ப்பயிற்சியின் இறுதி நாளான நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவும், இந்தியாவின் ஏவுகணைப் போர்கப்பலான ‘ஐஎன்எஸ் சிவ்லிக்‘ இல் இருந்து இறுதிநாள் போர்ப்பயிற்சிகளை அவதானித்துள்ளனர்.
செடெக் உலங்குவானூர்தி மூலம் இவர்கள் இந்தியப் போர்க்கப்பலுக்குச் சென்றிருந்தனர்.
இந்தப் போர்ப்பயிற்சியின் ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டில் இந்தியக் கடற்படையில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ஐஎன்எஸ்.சிவ்லிக்‘ இல் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க இயந்திரத்துடன், கட்டப்பட இந்தப் போர்க்கப்பலில் ரஸ்ய - இந்திய ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் போர்ப் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ரண்விஜய், ஐஎன்எஸ் சிவ்லிக், ஐஎன்எஸ் காரியல், ஐஎன்எஸ் கஞ்சர், ஐஎன்எஸ் செரியம், ஐஎன்எஸ் கோரதீவ் ஆக ஆறு போர்க்கப்பல்களுடன் கடற்படை உலங்குவானுர்திகளும், டோனியர் கண்காணிப்பு விமானம் ஒன்றும் பங்குபற்றியிருந்தன.
சிறிலங்கா கடற்படையின் சார்பில் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான சாகர மற்றும் சமுத்திர, ஏவுகணைப் போர்க்கப்பலான நந்திமித்ர, அதிவேக பீரங்கிப் படகுகளான பிரதாப, ரணஜய மற்றும் ஆறு அதிவேகத் தாக்குதல் படகுகள் என மொத்தம் 11 போர்க்கலன்களும் பங்கேற்றிருந்தன.
இந்தியக் கடற்படை சார்பில் சுமார் 1200 துருப்புகளும், கிட்டத்தட்ட அதேயளவான சிறிலங்கா கடற்படையினரும் இந்தப் போர்ப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர்.
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் போர்ப்பயிற்சியை அனைத்துலக சமூகமும், கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளும் கவனமான அவதானித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிய படகுகளின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த அனுபவங்கள் சிறிலங்கா கடற்படைக்கு நிறைவே இருப்பதாகவும், இத்தகைய தாக்குதல்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது குறித்து தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் இந்தப் போர்ப்பயிற்சிக்கு தலைமை தாங்கிய இந்திய கடற்படையின் கிழக்கு தளபதி றியர் அட்மிரல் எச்.சி.எஸ்.பிஸ்ற் தெரிவித்துள்ளார்.
சிறிய படகுகள் மூலமான தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த பயிற்சி ஊடகவியலாளர்களுக்கும் காண்பிக்கப்பட்டது.
சிறிலங்கா கடற்படையின் சிறிய தாக்குதல் படகுகளைக் கொண்ட அணியொன்று இந்தியப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சிவ்லிக் மீது தாக்குதல் நடத்திய போது, மரபுசார்ந்த ஆயுதங்களைக் கொண்ட பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அது பயனற்றுப் போக சிறிய ஆயுதங்களைக் கொண்ட படகுகள் மூலம் அந்தத் தாக்குதலை முறியடிப்பது போன்று அந்தப் போர் ஒத்திகை அமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது கடற்புலிகள் சிறிய படகுகளைக் கொண்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கையாண்ட போர் உத்திகளை சிறிலங்கா கடற்படை, இந்தியக் கடற்படைக்கு செயல்முறையில் விளக்கமளித்துள்ளது.
இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது கூட்டுப்பயிற்சி 2005ம் ஆண்டில் நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் போர்ப்பயிற்சி சிறிலங்காவில் போர் தீவிரமடைந்ததை அடுத்துக் கைவிடப்பட்டது.
போர் முடிவுக்கு வந்த நிலையில் இந்தப் போர்ப் பயிற்சி மீளத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியப் பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்ததாகவும், இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இந்தப் போர்ப்பயற்சி கடந்த 19ம் நாள் தொடக்கம் 24ம் நாள் வரையான ஆறு நாள்கள் நடைபெறும் என்று முன்னதாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு நாள் முன்னதாகவே இந்தப் போர்ப்பயிற்சி முடித்து கொள்ளப்பட்டுள்ளது.
போர்ப்பயிற்சிகளை இன்று முடித்துக் கொண்டு திருகோணமலையில் இருந்து புறப்படத் திட்டமிட்டிருந்த இந்தியப் போர்க்கப்பல்கள், ஒருநாள் முன்னதாகவே பயிற்சிகளை முடித்துக் கொண்டு நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் ஒருநாள் முன்னதாகவே போர்ப்பயிற்சி முடித்துக் கொள்ளப்பட்டு, இந்தியப் போர்க்கப்பல்கள் அவசரமாக புறப்பட்டுச் சென்றதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.நன்றி புதினப்பலகை








No comments:
Post a Comment