
அரக்கோணம் அருகே உள்ள பரமேஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தேசன் (வயது 47), கூலி தொழிலாளி. அவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
தேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு, போதையுடன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், சம்பாதித்த பணத்தை சரிவர வீட்டிற்கு கொடுக்காமல் குடித்து அழித்ததால், சாந்தி குடும்பம் நடத்த முடியாமல் தவித்தார்.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சாந்தி கோபித்துக்கொண்டு, 5 குழந்தைகளுடன் பனப்பாக்கம் அருகே வேட்டாங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடந்த 12 ந் தேதி தேசன் வேட்டாங்குளத்திற்கு சென்று, சாந்தியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்தார். ஆனால், பொறுப்பில்லாத குடிகாரனுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது என்று சொல்லி, தேசனுடன் செல்ல சாந்தி பிடிவாதமாக மறுத்து விட்டார்.
அதனால் மனம் உடைந்த தேசன், அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு, அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்நு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசன், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று காலை பரிதாபமாக செத்தார்.
இதுகுறித்து நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
5 குழந்தைகளின் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:
Post a Comment