சனல் 4 காட்சிகள் பொய்யானவை, புனையப்பட்டவை என கோதபாயாவும், சிறிலங்கா அரசும் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அதேவேளை இந்த காணொளிகளை சனல் 4விற்கு வழங்கியவர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் கோதபாய தரப்பு மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஆதாரங்களை வழங்கியதாக கூறப்படும் சிறிலங்கா படையினர் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் இறுதிக்கட்டத்தில் பணியாற்றிய 2ஆவது கட்டளைத்தளபதி ஜெயதிச, ஐ.ரி.என்.தொலைக்காட்சி செய்தியாளர் ராமவிக்கிரம ஆகியோரிடம் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியில் இறுதிக்கட்டத்தின் போது யுத்தகாட்சிகளை படம்பிடிக்க சென்றிருந்த ஐ.ரி.என் செய்தியாளர் ராமவிக்கிரம தற்போது நியூயோர்க்கில் ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியாக இருக்கும் சர்வேந்திர சில்வாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் ராமவிக்கிரம கொழும்புக்கு சென்ற வேளையில் இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தெரியவருகிறது.
சனல் 4 ஒளிபரப்பிய காட்சிகள் பொய்யானவை என மறுத்து வரும் சிறிலங்கா அரசு மறுபுறத்தில் அக்காட்சிகளை வழங்கிய படையினர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளையும் தீவிரமாக ஆரம்பித்துள்ளமை சனல் 4வும், ஐ.நா நிபுணர்குழுவும் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


No comments:
Post a Comment