போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் எச்சரிக்கைக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லையென சிறீலங்கா அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச அழுத்தங்கள் எதற்கும் சிறீலங்கா அரசாங்கம் அடிபாணியாதென அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தெளிவாக கூறிவிட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆலோசனை வழங்குவது, எச்சரிக்கை செய்வது போன்ற அறிக்கைகள் வெளியிடுவதை அமெரிக்கா போன்ற நாடுகள் தவிர்க்க வேண்டுமென அமைச்சர் கூறியிருக்கின்றார்.
சிறீலங்காவில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்ற அழுத்தம் அதிகரிக்குமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக நேற்று (29-06-2011) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சிறீலங்கா படையினர் குற்றம் புரிந்திருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பெனவும், படையினர் மீது விசாரணை நடத்துமாறு கூட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துக்கும் ஒரேமாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமெனவும், பெரிய நாடுகள் சிறிய நாடுகள் மீது தமது பலத்தை பிரயோகிப்பதை யாராலும் ஏற்க முடியாதெனவும் சிறீலங்கா அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment