சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர்க்குற்ற வீடியோக்களில் ஒன்று, இலங்கை அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவை எதுவித சென்சரும் செய்யாமல் உள்ளதை உள்ளபடியே இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது சனல் 4 தொலைக்காட்சி.இலங்கை கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவே இந்த வீடியோவை தாம் அனுப்பி வைத்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. இதனைத் தாம் இன்று பெற்றுக்கொண்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதிசெய்துள்ளது. இந்த வீடியோவின் காட்சிகளை இலங்கை அரசு சிங்கள ஊடகங்களுக்கும் வழங்கியுள்ள நிலையில், சில சிங்கள ஊடகங்கள் அதனை வெளியிட்டு மக்கள் கருத்தை அறிய முற்படுகின்றன.
இக் காணொளியில் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் உள்ள தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இலங்கை இராணுவம் சுடும் காட்சிகளும் அவர்கள் சிங்கள மொழியில் பேசிக்கொண்டு இருப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சில சிங்கள இணையங்கள், சிங்கள மக்களின் பின்னூட்டங்களையும் அதில் பிரசுரித்துள்ளனர்.
சுமார் 90 வீதமான சிங்களவர்கள் இந்த வீடியோக் காட்சிகள் பொய் என எழுதியுள்ளதோடு, சிங்களம் பேசும் இராணுவத்தினர் தமிழர்கள் என்றும், அவர்கள் பேசும் சிங்களம், ஒரு தமிழர் சிங்களம் பேசினால் எவ்வாறு இருக்குமோ அவ்வாறு அமைந்துள்ளது என்று நக்கல் அடித்தும் எழுதியுள்ளனர்.
போர் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் தாம் அதனை ஆராய்வோம் என அறிவித்த இலங்கை, சனல் 4 இடம் இருந்து இந்த வீடியோக்களைப் பெற்று அதனைப் பற்றி ஆராயாது, அதனை சிங்கள ஊடகங்களிடம் கொடுத்து பிரசுரிக்கச் செய்து அதனை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையிலேயே இறங்கியுள்ளது.
இவர்களா இந்தக் கொலைகள் குறித்து நேர்மையான விசாரணைகளை நடத்தப்போகிறார்கள்? சர்வதேசம் எப்போது தான் கண் விழிக்கும்?


No comments:
Post a Comment