கிழக்கு மாகாணத்தில் அரசியல்கட்சிகளின் பின்புலத்தில் சில ஆயுதக்குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். கிழக்கில் செயற்படும் ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று திமிலைத்தீவு மக்கள் வங்கிக் கிளையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்தை அடுத்து வங்கி முகாமையாளர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்திலேயே மட்டக்களப்பில் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொலைகள் , கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதக்குழுக்கள் தம்மிடம் உள்ள ஆயுதங்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஆயுதங்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆயுதப் படையினருக்கு மட்டுமே ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி உள்ளது வேறெவரும் அதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment