
ஈழத் தமிழர்கள் சம உரிமையுடன் தங்கள் தாய்பூமியில் வாழ்வதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாபெரும் பேரணி நடத்த நடிகர் சரத் குமார் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
தமிழக மீனவர் நலன்காக்க கச்சத் தீவை மீட்கக் கோரியும் ஈழத்தமிழர்கள் சமஉரிமை பெறுவதை உறுதிசெய்யும் வகையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தவும் நடிகர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத் குமார், பொதுச் செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர் மனோரமா தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்ததாகவும், அந்த விழாவில் முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் சரத்குமார் பின்னர் தெரிவித்தார்.
தற்போது தமக்கு மிகுந்த அவசரமான பணிகள் இருப்பதாகவும் பாராட்டு விழாவில் பங்கேற்பது குறித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று முதல்வர் கூறியதாகவும் அவர் சொன்னார்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை ஆட்சியாளர்கள் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரி்க்கவும் இலங்கைத் தமிழர்கள் சம உரிமையுடன் தங்கள் தாயகத்தில் வாழவும் பிற நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்றை நடிகர் சங்கம் நடத்தி ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
திரைப்படத் துறையினர் பயன்படுத்துவதற்காக பையனூரில் முன்பு அளிக்கப்பட்ட நிலம் 99 வருட குத்தகையில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குப் பதிலாக நலிந்த கலைஞர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக வழங்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாக ராதா ரவி தெரிவித்தார்.


No comments:
Post a Comment