
இலங்கை மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்முகமாக கண்ணால் கண்ட சாட்சிகள் எதுவுமின்றி போலியான காணொளிக்காட்சியை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டி சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக நஷ்டஈடு கோரி மூன்று புலம்பெயர் சிங்கள அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளன.
இதுகுறித்து திவயின சிங்கள ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சனல் 4 தொலைக்காட்சி சேவையின் ஜோன் ஸ்னோ மற்றும் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே ஆகிய இருவருக்கு எதிராக 100 மில்லியன் நஷ்டஈடு கோரி பிரித்தானிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் சிங்கள அமைப்புக்களே இந்த வழக்கை தாக்கல் செய்யவுள்ளன. அதேவேள அரசியல்வாதிகள் சார்பில் 5 வழக்கறிஞர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் சனல் 4 தொலைக்காட்சியில் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் போலியான காணொளியை ஒளிபரப்பியமை, காணொளியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சிகள் இல்லாமை மற்றும் விடுதலைப்புலிகளின் யுத்தக்குற்றங்களை மறைக்க முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு சவேந்திர சில்வா அதன் படத் தயாரிப்பாளர் கெலம் மெக்ரேவிற்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட 48 மணிநேர கால எல்லை நேற்றுடன் முடிவடைந்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் அனைத்துலக மன்னிப்புச்சபையும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.


No comments:
Post a Comment