
வடக்கிலுள்ள உறவுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகின்றது.
நோர்வே, கனடா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தே, வன்னிப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகளவிலான பணம் கிடைத்து வருவதாக இலங்கை அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் இலங்கையின் அரச வங்கிகளே கிளைகளை ஆரம்பித்தன. மீள் குடியமர்வின் பின்னரே ஏனைய தனியார் வங்கிகள் கிளைகளை ஆரம்பித்தன.
இந்நிலையில் இலங்கையின் அரச வங்கிகளே வன்னிப் பகுதியில் அதிகளவில் கிளைகளைக் கொண்டுள்ளதால், அவற்றின் ஊடாக இலகுவாக இலங்கை அரசாங்கம் இதுபற்றிய தகவல்களை திரட்டி வருவதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2009ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் இலங்கை வங்கி ஊடாக வடபகுதி மக்களுக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் அனைத்து வங்கிகளிலும் புதிதாகத் திறக்கப்பட்ட 50,982 கணக்குகளின் ஊடாக 1908.71 மில்லியன் ரூபா பணம் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
நெதர்லாந்து அதிகாரிகள் அண்மையில் நடத்திய விசாரணைகளின் போது, போர் முடிவுக்கு வந்த பின்னர் புலிகளால் வெளிநாடுகளில் திரட்டப்பட்ட நிதி போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாக இலங்கை புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.


No comments:
Post a Comment