தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை அரசினாலும் அரச படைகளினாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் முறையிடவுள்ளார் எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லியில் இந்திய முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.இதன்போதே அவர் இந்த முறைப்பாட்டைத் தெரிவிப்பார் என்றும் இதனைத் தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கோருவார் எனவும் அறியவருகிறது.
ஆயினும் சம்பந்தன் யார் யாரைச் சந்திப்பார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை எனப் புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து அவரைக் கைது செய்யுமாறு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.
இந்தநிலையில் இரா.சம்பந்தன் மருத்துவ சிகிச்சை ஒன்றுக்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்னதாக புதுடில்லியில் இந்தியாவின் முக்கிய் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்தச் சந்திப்புக்களில் தமிழர் தாயகப் பகுதியில் தற்போது அரசினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புக் குறித்து அவர் கடும் விசனத்தை வெளியிடுவார் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


No comments:
Post a Comment