
நீண்ட பாதையின் ஊடான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் போராட்டங்களிலும் ஒன்றை கவனிக்கக் கிடைக்கிறது. நடை சோர்ந்து களைப்பு மிகும்போதெல்லாம் அந்த மனிதனின் பெயரை யாரோ ஒருவர், ஒரு துரத்து மலையின் எதிரொலி போல ஓங்கி ஒலிக்கும்போது எங்கிருந்துதான் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறதோ, அப்படி ஒரு உறுதியும் பெரும் உற்சாகமும் நுரைபுரண்டு ஓடும்.
அண்மையில்கூட இலண்டனில் மகிந்தர் பொதுநலவாய நாடுகளின் பொருளாதாரப் பேரவையில் உரையாற்றுவதை தடுப்பதற்கான பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் இதனையே பலதடவை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.
எங்கள் தலைவன் என்று ஒரு குரல் தொடங்கியதும் ‘பிரபாகரன்’ என்று அனைத்து குரல்களும் எந்தவொரு பிசிறும் இன்றி சொல்வது வெறும் கோசமாகவும் கூட்டத்தில் கூவுதலுமாக தெரியவில்லை. அவர்களின் மன ஆழங்களில் இருந்து இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பீறிடும் ஒரு சத்தியத்தின் குரலாகவே தெரிகிறது.
ஆம், அந்த மனிதனின் பெயரே சோர்வை விலத்தி எறிந்து விடுதலைக்கான உரத்தையும் உறுதியையும் தரும் மந்திரச்சொல்லாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. எப்படி எமது தேசியக்கொடி எமது தேசியத்தின் அடையாளமாகவும் எழுச்சியின் சின்னமாகவும் ஏந்திப் பிடிக்கப்படுகிறதோ அதனைப் போலவே அந்த மனிதனின் பெயரும் அவரும் உருவமும் தமிழினத்தின் உரிமைகளுக்கான எழுகையின் ஒரே குறிச்சொல்லாக விளங்குவதைப் பார்க்கமுடிகிறது.

இன்றும் என்றும் விடுதலைக்கான எழுச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒற்றை சொல் ‘பிரபாகரன்’ என்பதே.
இந்த வார்த்தைக்குள் எப்படி இப்படியான ஒரு மந்திரசக்தி புகுந்துகொண்டது. ஒரு முழு இனத்தினதும் இயங்கு திசையை இன்றும் தீர்மானிக்கும் ஒற்றைச் சொல்லாக பிரபாகரன் என்ற பெயர் இருக்கின்றது என்றால் அது வெறும் ஒரு இரவுக்குள் அவர் உருவானது அல்ல. நீண்டதும் மிகக் கடினமானதும் வலிகள் நிறைந்ததுமான அவரின் போராட்ட வரலாற்றினுள் இருந்தே அது முகிழ்ந்தது.
அவரது வாழ்வு முழுதும் இதற்கான உதாரணங்கள் கோடி கோடியாகக் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒன்றை இந்த வாரம் பகிர்ந்துகொள்ளலாம்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான இன்றைய நிலையில் ஒவ்வொருவரிடமும் அடுத்தவர் மீது சொல்லிக்கொள்ள முடியாத பல சந்தேகங்களும், பயங்களும் நிறைந்ததாகவே தமிழர் அரசியல்வெளி இருக்கிறது. எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி சிதைத்ததை விட இதுவே அவனது பெரிய வெற்றியாகக் கருதலாம். ஆம், எல்லோருக்குள்ளும் சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் விதைத்திருக்கிறானே அதுவே எதிரியின் பெரும் வெற்றி.
இதனை எப்படி உடைத்தெறிந்து எமது இனம் முன் நகரப் போகின்றது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் கேள்வி ஆகும். இதனை உடைத்தெறியாமல் ஒரு அங்குலம்கூட விடுதலைப் போராட்டத்தை முன் நகர்த்த முடியாது என்பதும் மிகப்பெரும் உண்மையாகும்.
ஆனால் இதற்கான தெளிவான பதிலை தேசியத் தலைவர் இருபத்து எட்டு வருடங்களுக்கு முன்னரேயே கூறி இருப்பதைப் புரிந்துகொண்டால் நாம் பார்க்கும் எல்லோரையும் நம்பிக்கையீனமாகவும் சந்தேகமாகவும் நோக்குவது சரியா தவறா என்பது விளங்கும்.
1984ம் ஆண்டு அது. 83 இனக்கலவரத்தின் பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியின் விளைவாக பயிற்சிக் களங்கள் அங்கு உருவாக்கப்பட்டு வீரர்கள் உருவாக்கப்பட்ட பொழுது அது. தேசியத் தலைவரின் இருப்பிடம் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்திருந்தது. அமைப்பின் கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டு அதில் புதிய வீரர்கள் இணைக்கப்பட்டு கொண்டிருந்த காலமும் அதுதான். அதுவரை காலமும் தலைவருடன் ஒன்றாக அலைந்து திரிந்து அமைப்பை வளர்த்த மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டமைப்பின் பொறுப்பாளர்களாக மாறி விட்டிருந்த பொழுது அது.
தலைவருக்கு என்று அதுவரை மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கும் இயக்க வளர்ச்சியில் வேறு வேலைகள் வழங்கப்பட்டுவிட்டிருந்தன. தலைவருக்கு என்று ஒரு புதிய பாதுகாப்பு அணி, மெய்பாதுகாவல் அணியாக உருவாக்கப்பட்டது அப்போது. 83ம் ஆண்டுக்கு பின்னர் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற வீரர்களில் திறமையான, நம்பிக்கையான வீரர்கள் முப்பது பேரளவில் அந்த மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டார்கள். (பின்னர் மிகப்பெரிய தளபதியாக விளங்கிய பிரிகேடியர் சொர்ணமும் அதில் ஒருவர்)
தலைவரின் வீட்டை எந்த நேரமும் இரவு பகலாக பாதுகாத்து தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இவர்களின் வேலை. தலைவரின் வீட்டுக்குள் எந்தநேரமும் துப்பாக்கியுடன் திரிவதற்கு இவர்களுக்கு அனுமதியும் உரிமையும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் தலைவரைச் சந்திப்பதற்காக அவரின் ஆரம்பகால நண்பர்கள் வந்திருந்தார்கள். தலைவரை மிக நீண்ட காலமாக அறிந்தவர்கள் அவர்கள். தலைவரின் ஆரம்பகால செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். அதன் பின் தமது சொந்த வாழ்க்கைக்குள் புகுந்தவர்கள் அவர்கள். தலைவர் மீது அளவு கடந்த நேசமும் பற்றும் பாசமும் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
தமது நேசத்துக்கு உரிய தம்பி ஒரு பெரும் விடுதலை அமைப்பின் தலைவனாக ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு வழிகாட்டுபவனாக இருப்பதை பார்க்க அவர்களுக்கு பெரும் மகிழ்வுதான். ஆனாலும் ஒரு விடயம் மட்டும் அவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது. அதனையும் அவர்கள் தலைவருடன் உணவு அருந்தும் பொழுதில் சொல்லி விட்டார்கள்.
‘தம்பி, முதல் என்றால் உன்னுடன் எப்போதும் சீலன் அல்லது சங்கர் அல்லது கிட்டு அதுவும் இல்லை என்றால் லாலா, புலேந்திரன்தான் பாதுகாப்பாக நிற்பார்கள். இப்போது பார், உன் வீட்டுக்குள் யார் யாரோ புதிய பொடியள் எல்லாம் பிஸ்டல், ரைபிள்களுடன் நிற்கிறான்கள். கவனம் தம்பி. யாரையும் நம்பமுடியாது...’ என்று தலைவருக்குச் சொன்னார்கள்.
அப்போது தலைவர் தனக்கே உரித்தான புன்முறுவலுடன் ‘பின்னுக்கு நிற்கிறவன் சுடுவான் என்று பயந்து கொண்டிருந்தால், முன்னுக்கு ஒரு வேலையும் என்னாலை செய்ய ஏலாது. சாவு வரும் என்று பயந்து விடுதலைப் போராட்டத்தை நடத்தேலாது. விடுதலைப் போராட்டம் என்றால் நம்பிக்கையும் முக்கியம். அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்’ என்று சொன்னார்.
இவை வெறும் வசனங்கள் அல்ல. இவை ஒரு கதையாடலில் அவர் சொன்ன பதில் மட்டும் அல்ல. இன்றைய குழப்பமான காலகட்டத்தில் அனைவரும் உணர வேண்டிய வார்த்தைகள் அவை. தேசிய விடுதலைப் போராட்டத்தில் அருகில் நிற்பவன் ஏதும் செய்வான் என்ற அச்சத்துடனேயே பயணிக்க முடியாது. இந்த கதையாடல் முடிந்து ஒரிரு மாதங்களில் இந்திராகாந்தி தனது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே தனது சொந்த இல்லத்துள் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார். அது நடந்த இரண்டு நாட்களில் முன்னர் தலைவரைச் சந்தித்த அவரது நண்பர்கள் மீண்டும் வருகிறார்கள்.
‘பார்த்தியா, அந்தப் பெரிய தலைவியையே மெய்ப்பாதுகாப்பு வீரர்கள் சுட்டுவிட்டார்கள். கவனம் தம்பி’ தலைவருக்கு மீண்டும் சொல்லுகிறார்கள். இந்த முறையும் தலைவர் அதே தெளிவுடனும் உறுதியுடனும் அதனைச் சொல்லுகிறார்.
‘விடுதலைப் போராட்டம் என்றால் நம்பிக்கை முக்கியம்’
‘அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்’
நன்றி: ஈழமுரசு


No comments:
Post a Comment