
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் 200 பேரைக் கொண்ட அகதிகள் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் கார்ல் ஓ´கல்லஹான் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான அகதிகள் படகில் இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதில் பயணித்தவர்களில் சுமார் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், 40 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக ஆட்களை ஏற்றிவந்தமை காரணமாகவே படகு கவிழ்ந்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இலங்கையூடாக பயணத்தை மேற்கொண்டிருந்த படகொன்றே விபத்துக்குள்ளானதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள கிறிஸ்மஸ் தீவுக்கு அருகிலும், இந்தோனேஷியாவிலிருந்து 120 கடல் மைல்கள் தொலைவிலும் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
110 பேர் உயிருடன் மீட்பு: இலங்கையர்களா என சந்தேகம்!
அகதிகளை ஏற்றியவாறு அவுஸ்திரேலியா நோக்கிச் செல்லும் வழியில் இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் இருந்து 110 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா கடற்பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களில் இலங்கையர்கள் இருக்கிறார்களா என இன்னும் தெரியவரவில்லை எனவும் இந்தோனேசியா தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment