சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்று ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்தப் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் இலங்கையர்கள் என முன்னர் அறிவித்த ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபை பின்னர் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கியதுடன் இலங்கையர்கள் எவரும் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அறிவித்தது.இலங்கையர்கள் என நம்பப்படும் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்றுமுன்தினம் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடலில் விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஏ.எப்.பி மற்றும் சிட்னி மோனிங் ஹரால்ட் ஆகியன செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த படகு விபத்தில் சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அது கூறியுள்ளது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 110 பேரை இந்தோனேசியப் கடற்பாதுகாப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட 110 பேரில் 4 பேர் பின்னர் உயிரிழந்ததாகவும் இவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை எனவும் இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவர் நந்த மல்லவராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி வந்து விபத்துக்குள்ளான படகில் இலங்கையர்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அநேகமானோர் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என ஆஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.
200 பேர் பயணித்ததாகக் கூறப்படும் படகு விபத்துக்குள்ளானதில் 110 பேர் தற்போது உயிருடன் இருப்பதாகவும் 90 பேர்வரை காணாமல் போயுள்ளதாகவும் ஆஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தின் ஊடாக அவதானித்த போது பலர் உயிர்காக்கும் அங்கிகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் உயிர்காக்கும் அங்கிகள் கடலில் மிதந்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.கவிழ்ந்த படகு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றதா என்பது பற்றி நிச்சயமாக எதுவும் கூறமுடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகு இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
படகில் பயணித்த பிரஜைகள் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்கள் இந்தப் படகில் இருந்தமை தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளிவரும் நிலையில், எங்கிருந்து இந்தப் படகு புறப்பட்டுச் சென்றது என எங்களால் நிச்சயப்படுத்திக் கூறமுடியாதுள்ளது’ எனவும் அவர் கூறினார்.
இந்த அனர்த்தத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்கவில்லை என இந்தோனேஷியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment