இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 200 பேருடன் ஆஸ்திரேலியா சென்ற படகொன்று இந்தோனேஷி யாவின் கடற்கரைப் பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள கிறிஸ்மஸ்தீவின் வடக்கே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது அந்தப் படகில் பயணித்த இலங்கையர்களில் 75 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இவர்களில் அனேகமாக எல்லோரும் தமிழர்களே என ஆஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். படகிலிருந்த 40 பேர் ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷியக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்தத் தகவலை ஆஸ்திரேலியச் சுங்கப்பிரிவு நேற்று மாலை உறுதிப்படுத்தியது. இலங்கை நேரப்படி நேற்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கிறிஸ்மஸ்தீவின் வடக்கே ஏறத்தாழ 110 கடல்மைல்களுக்கு அப்பால் கவிழ்ந்த படகை வேவுப்பணியில் ஈடுபட்டிருந்த விமானமொன்று நேற்று வியாழக்கிழமை ஆஸ்திரேலிய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் கண்டுபிடித்துள்ளது என ஆஸ்திரேலியச் சுங்கப்பிரிவு தெரிவித்தது.
இப்படகில் ஏறத்தாழ 200 பேர்வரை பயணித்திருக்கக் கூடும் எனவும் முழுமையான விவரங்கள் இன் னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
தலைகீழாகக் கவிழ்ந்த படகின் மேற்பாகத்தில் தங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் நீரில் மூழ்கிவிட்டார்கள். இதில் 75 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் ஏனையோரின் கதி தெரியவில்லை எனவும் மேற்கு ஆஸ்திரேலிய பொலிஸ் ஆணையாளர் கார்ள் ஓ கலஹன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எத்தனை பேர் பலியாகியிருப்பர் என உறுதியாகக் கூறமுடியாது. அப்படகில் 200 உயிர்காப்பு அங்கிகளும் இருக்கவில்லை. நீரில் சடலங்கள் மிதந்து கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருப்போர் குறித்து நாம் அச்சப்படுகிறோம் என்றும் அவர் கூறினார்.
படகில் இருந்த அனைவரும் இலங்கையில் இருந்து புறப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் எனவும் அவர்களில் பெரும் பாலானோர் தமிழர்கள் எனவும் ஆஸ்திரேலியா சுங்கப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியத் தேடுதல் கண்காணிப்புக் கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மீட்புப் பணிகளில் ஆஸ்திரேலியக் கடற்பாதுகாப்பு அதிகார சபையும் ஈடுபட்டுள்ளது. இந்தோனேஷிய தேடுதல் மீட்பு அதிகார சபையான பஸார்னஸ் முழு வீச்சில் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்பாதுகாப்பு அதிகார சபையின் தகவல் படி இன்னமும் பலர் கடலில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாகவும் ஆயினும் அவர்களின் தொகையை நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிய வருகிறது.
உயிருக்குப் போராடுவோரை காப்பாற்றுவதற்காக ஆஸ்திரேலிய, இந்தோனேஷிய கடற்படைக் கப்பல்களும் அனர்த்தம் நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். அத்துடன் இரு நாடுகளின் விமானப் படையினரும் மீட்புப் பணிக்கு உதவி அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துத் தொடர்பான முழுமையான தகவல்களை அறிய தாம் காத்திருப்பதாக இந்தோனேஷிய தேடுதல் மீட்பு அதிகார சபையான “பஸர்நாஸ்’ பிரிவின் பேச்சாளர் ஹகா பிரகோசோ தெரிவித்தார். கவிழ்ந்த படகு இலங்கையைச் சேர்ந்தது என ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சுமார் 238 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றி வந்த மேலும் மூன்று படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடந்த 24 மணி நேரமாக கடலில் இடைமறித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இந்த மூன்று படகுகளில் பயணித்தோரும் இந்த விபத்துச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment