
தாயகமண்ணில் அடக்குமுறைகளுக்கும், இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்கு வலுச்சேர்க்க தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அணிதிரள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
நில அபகரிப்புக்கு எதிரான மாபெரும் மக்கள் போராட்டம், தமிழர் தாயகத்தின் கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள திருமுறிகண்டியில் எதிர்வரும் ஜுன் 26 ஆம் திகதி இடம்பெறுகின்றது.
இப்போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், சமாந்திரமாக ஒரே நாளில் புலம்பெயர் நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றது.
இந்நிலையில், நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் தாயகத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தோழமையுணர்வை வெளிப்படுத்த அனைவரும் அணிதிரள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
தமிழீழத் தாயகத்தினை சிங்களமயமாக்கும் திட்டத்தை, சிங்கள அரசு தீவிரப்படுத்தி வருவதனைத் தாயகத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் துல்லியமாக வெளிப்படுத்துவனைத் தாங்கள் அறிவீர்கள்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், வீதிக்கு வீதி முளைக்கும் புத்தர் சிலைகளும், மேம்பாடு என்ற போர்வையில் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனக் கபளீகர முயற்சிகளும், ஈழத் தமிழர் தேசத்தின் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கி வருகின்றன.
தமிழீழத்தின் வீதிகள் யாவும், வீடுமனைகள் யாவும், வழிபாட்டுத் தலங்கள் யாவும் சிங்கள ஆக்கிமிப்புப் படைகளின் சப்பாத்துக்கால்களால் மிதிபட்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
ஒரு நாடு ஒரு மக்கள் என்ற கோசத்தின் அடிப்படையில், இலங்கைத் தீவினை சிங்கள நாடாகவும், சிங்கள தேசத்தின் நாடாகவும் ஏற்று, அடங்கி வாழ் என தமிழீழ மக்களுக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக சிங்களம் கட்டளையிடுகிறது.
சிறிலங்காவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும், அடக்குமுறைச் சட்டங்களுக்கு மத்தியிலும் சிங்களத்தின் நிலஆக்கிமிப்புக்கு எதிரான போராட்டத்தை தாயக அரசியல் தலைவர்களும், மக்களும் முன்னெடுத்து வருகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்களை, சட்டத்தின் மூலமும், படையினரின் அடாவடித்தனத்தின் மூலமும், புலனாய்வாளர்களின் காடைத்தனம் மூலமும் அடக்கி ஒடுக்க முனைகிறது சிங்களஅரசு.
அடக்கு முறைகளுக்கும் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியிலும், தாயகமக்கள் மேற்கொள்ளும் இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கவேண்டிய கடமைபுலத்தில் உள்ளமக்களுக்கு இருக்கிறது.
இதன் நிமித்தம், தமிழர் வாழும் தேசம்யாவும் நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவிய அளவில் நமது தாயகத் தலைவர்களுக்கும் , மக்களுக்கும் தோழமையுணர்வு தெரிவித்து, தமிழர் வாழும் பல்வேறுநாடுகளிலும் எதிர்வரும் 26 ஆம் திகதி அடையாள எதிர்ப்புப் போராட்டத்தை நாடுகடந்த தமிழீழு அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இப் பேராட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு, நமது நிலத்தை காக்க போராடிக் கொண்டிருக்கும் நமது தாயகத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் தோழமையுணர்வை வெளிப்படுத்த ஒன்றிணைவோம்.


No comments:
Post a Comment