
வடபகுதியில் பொதுமக்களின் நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதை எதிர்த்து யாழ். தெல்லிப்பழையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை திடீரெனத் தடுத்து நிறுத்திய படையினர் ஊர்வலத்தில் பங்குகொண்டவர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
மக்கள் மீது கழிவு ஒயிலும் ஊத்தப்பட்டுள்ளது.
வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்பு, வலிகாமம் வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு தடை என்பவற்றுக்கு எதிராக தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதிப்போராட்டம் இன்று காலை நடைபெற்றது.
வலிகாமம் வடக்கு மக்களின் வாழ்வுரிமையினை முன்னிலைப்படுத்தி இன்று காலை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் முன்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்குப் பொலிஸார் கடும் எதிர்ப்பும், தடையும் விதித்திருந்த நிலையிலும் போராட்டம் வெற்றிகரமானதாக நிறைவடைந்திருக்கின்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி என்பனவும் கலந்துகொண்டிருந்தன.
காலை 10மணயளவில் துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமான போராட்டம், பிரதான வீதியை அடைந்தபோது பெருந்தொகையான பொலிஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவுக்கு ஆயுதபாணிகளாகக் குவிக்கப்பட்டிருந்தார்கள். குண்டாந்தடிகளும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தின் இறுதியில் அருகேயுள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கு மகஜர் சமர்ப்பிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற போதே பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைடுத்து பாராளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, செ.கஜேந்திரன், எம்,கே.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் பொலிஸாருடன் கடுமையாக வாதாடினர். எனினும் அதற்கு உடன்படாத பொலிஸார், வீதியின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி அடாவடி புரிந்தனர்.
இந்நிலையில் மக்கள் அப்படியே வீதியில் அமர்ந்திருக்க, மாவை சேனாதிராசா, கஜேந்திரன், சிவாஜிலிங்கம், மற்றும் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 5பேர் சென்று பிரதேச செயலகத்தில் மக்களின் மகஜரை கையளித்தனர். இதன் பின்னர் மக்களுடன் பேசிவிட்டு, பின்னர் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஊர்வலமாகச் சென்று மகஜர் சமர்ப்பிப்பதை பொலிஸார் தடுக்க முடியாது என மாவை கடுமையாக வாதிட்டபோது சீற்றமடைந்த பொலிஸார் கடுமையான வார்த்தைகளால் மாவையை திட்டித் தீர்த்ததாக அருகில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
இருந்த போதிலும் குழுக்குழுவாகச் சென்று மகஜர் சமர்ப்பிக்க பொலிஸார் இறுதியில் அனுமதி வழங்கினார்கள்.
அதன் பின்னர் பொதுமக்கள் பஸ்களில் திரும்பிச் சென்ற போதே மோட்டார் சைக்கிளில் ஆயுத தாரிகளாக வந்த படையினர் பஸ்களை மறித்து பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியதுடன், அவர்கள் மீது பழைய ஒயிலை ஊற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் தொடர்கின்றது.








இரண்டாம் இணைப்பு
சொந்த மண்ணில் வாழ வழிகேட்டு போராடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் மீது புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்களும், காட்டுமிராண்டிகளும் இணைந்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
மயிலிட்டிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் பருத்தித்துறை நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வழிமறித்த படைப் புலனாய்வாளர்கள், பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர்.
எனினும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் பயணித்திருந்த நிலையில், பேருந்தின் மீது கழிவு ஓயிலை ஊற்றியுள்ளதுடன், இனிமேல் போராட்டம் என்று எதற்கும் வந்தால் இதைவிடவும் மோசமாக நடக்கும் என எச்சரித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை அவர்கள் ஊற்றிய ஓயிலினால், பேருந்திலிருந்து பெண்கள், முதியவர்கள் உட்பட அனைவரும் ஓயிலில் நனைந்துள்ளதுடன், அவர்களது ஆடைகளும் முற்றாக கறைப்பட்டுக் கொண்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வந்திருந்தார்.
அவர்களிடம் மக்கள் நடந்து சம்பவத்தை தெரிவித்ததுடன், தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து மக்களை அழைத்துக் கொண்டு பருத்தித்துறை வரை சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டு அவர் திரும்பியுள்ளார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






No comments:
Post a Comment