
ஈழப் போராட்ட வரலாற்றில் இறுதிவரை முக்கிய போர் முனையாக அமைந்த முகமாலை போர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட போர் யுக்திகள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளன.விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் அனைத்தும் அதி சக்தி வாய்ந்தவையாக உள்ளன. இதனால் புலிகளின் ஆயுத தயாரிப்பு பலம் குறித்தும் மேற்படி நிறுவனங்கள் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.
இலங்கையிலேயே அதிகூடிய வெடிபொருட்கள் முகமாலையிலேயே புதைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரும் புலிகளும் தமது முன்னரங்குகளில் சரிக்குச் சரி சமானமானளவு வெடிபொருட்களை இங்கே புதைத்துள்ளனர்.
இதில் புலிகளின் வெடிபொருட்கள் மிகச் சக்தி வாய்ந்தவையாக இருப்பதுடன் அவை மிக நுட்பமான வகையில் புதைக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கண்ணிவெடியகற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
65ஆயிரத்து 610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இலங்கையில் முகமாலை 14 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது. இங்கு இதுவரை 7500 சதுர மீற்றர் பரப்பளவிலேயே வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்ற நிலையில் இதுவரை முதலாவது முன்னரங்கிலேயே வெடிபொருட்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது முன்னரங்கில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அது முடிவடைய இரண்டு வருடங்களாகுமென்று மேற்படி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
முகமாலையில் ஒட்டுமொத்தமாக வெடிபொருட்களை அகற்றுவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகுமென்றும் மேற்படி நிறுவனங்களின் அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர்.
முகமாலையில் வெடிபொருட்களை அகற்றும் பணி மிக ஆபத்து நிறைந்ததாகவும் மிகவும் சவாலானாதாக உள்ளதென்றும் மேற்படி கண்ணிவெடியகற்றும் பிரிவினர் கூறுகின்றனர்.
விடுதலைப் புலிகள் தமக்கேயுரிய போரியல் உத்தி முறைகளைப் பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு இங்கு வெடிபொருட்களைப் புதைத்துள்ளனர்.
மேலும் தங்களாலேயே தயாரிக்கப்பட்ட ஜொனி மிதிவெடி, தாங்கி எதிர்ப்புக் கண்ணிவெடிகள் மற்றும் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பொறி வெடிகள், அமுக்க வெடிகள் போன்ற அதி சக்தி வாய்ந்த வெடிபொருட்களையும் அவர்கள் இங்கே புதைத்திருக்கிறார்கள்.
அவர்களால் புதைக்கப்பட்ட இந்த வெடிபொருட்களை அவர்களாலேயே அன்றி வேறெவராலும் இலகுவில் எடுக்க முடியாது. இதனால் மிகவும் கவனமான முறையிலேயே இந்த வெடிபொருட்கள் அகற்றும் பணியைத் தாங்கள் முன்னெடுப்பதாகவும் மேற்படி கண்ணிவெடியகற்றும் நிறுவன அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலைப் போன்று உலகில் யாரும் அறிந்திராத இடமாக இருந்த முகமாலை 4 ஆம் கட்ட ஈழப் போராட்டத்தின் பின்னரே உலகின் பார்வையைப் பெற்ற இடமாக மாறியது.
இதற்குக் காரணம் புலிகளின் போர்த் தந்திரோபாயம். 4 ஆம் கட்ட ஈழப் போரின் போது இறுதிவரை சிங்களப் படைகளுக்கும் சிங்கள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய இடம் முகமாலை.
முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீரமிகு தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது சிங்கள இராணுவம். முகமாலையை உடைத்துக்கொண்டு முன்னேறினால் ஆனையிறவைக் கைப்பற்றி நேரே கிளிநொச்சிக்குச் சென்று அதையும் கைப்பற்றலாம் என்று சிங்கள இராணுவம் திட்டம் வகுத்தது.
இதற்காக பல உத்திகள் கையாளப்பட்டும் எதுவும் வெற்றியளிக்காததால் சிங்களம் நாட்டின் சகல வளங்களையும் ஒன்று திரட்டி பல்லாயிரக்கணக்கான படையினரைக் குவித்து முகமாலையை உடைப்பதற்குப் பல முறை முயன்றும் சிங்கள அரசுக்கும் படையினருக்கும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
பல முறை இராணுவம் கடும் சமரிட்டு புலிகளின் முன்னரங்குகளை நெருங்கிய போதிலும் புலிகள் மிக வீராவேசத்துடன் போரிட்டு சில மணித்துளிகளிலேயே இராணுவத்தை மீண்டும் முன்னைய இடங்களுக்கு விரட்டியடித்த சம்பவங்கள் முகமாலையில் இடம்பெற்றன.
முகமாலை எதிரியிடம் வீழ்ந்தால் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்பன ஒவ்வொன்றாக எதிரியிடம் வீழும் என்பது புலிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது. இதனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் வட போர் முனைக் கட்டளைத் தளபதியான கேணல் தீபன் அவர்களின் தலைமையில் போராளிகளை முகமாலையில் நிறுத்தினார்.
இறுதிப் போர் நெருங்கி வந்த போது கூட கேணல் தீபன் அவர்கள் முகமாலையை இராணுவத்திடம் கைவிடவில்லை. யுத்தம் நெருங்கி வந்த பின்னர் தேசியத் தலைவரின் கட்டளையின் பேரிலேயே தீபனும் போராளிகளும் முகமாலையை விட்டுத் தாங்களாகவே விலகிச் சென்றனர்.
அந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு மனமில்லாமல் மிகுந்த கவலையோடு தலைவரின் கட்டளைக்காக தளபதி தீபன் அவர்களும் போராளிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக அங்கு சமரிட்ட போராளிகள் இன்றுவரை கூறுகின்றனர்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரமும் அவர்களின் போரியல் உத்தி முறைகளும் மிகச் சிறப்பானவை என்றும் எவராலுமே புலிகளின் வீரத்தை விஞ்ச முடியாதென்றும் காலம் காலமாக கூறப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது சர்வதேச மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களும் புலிகளின் போரியல் உத்திகளைப் பார்த்து வியப்பும் ஆச்சரியமும் அடைந்துள்ளன.


No comments:
Post a Comment