
வடக்கு கிழக்கில் இருந்து வரும் செய்திகள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆபத்து நிறைந்ததாக இருக்கின்றன. இராணுவம் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் குடிமக்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டும் போது உரித்தாளர்கள் யார், எங்கே என்ற கேள்வியைக் கேட்கின்றனர்.
இந்தக் கேள்விகளின் உள்நோக்கம் பற்றிய அலசலை உள்ளுர் கல்விமான்களும் இராணுவத்தின் அண்மைக்கால நகர்வுகளை அவதானிப்போரும் மேற்கொள்கின்றனர். சில தமிழ் பேசும் இராணுவச் சிப்பாய்கள் ஒரு முக்கிய செய்தியைக் கசிய விட்டுள்ளனர்.
உரித்தாளர் யார், எங்கே அவர்கள் என்ற கேள்விகளுக்கு நேரடி விடை கூறப்படும் போது படையினர் தமது படிவத்தில் ஒரு அடையாளம் இடுகின்றனர். இந்த அடையாளம் மேலதிக விசாரணைக்கு இடமளிக்கிறது. அதாவது காணி நிலத்தின் உரித்தாளர் யார் என்றால் அவருடைய பெயர் மற்றும் முகவரி தான் விடை.
விடயம் அந்தளவோடு முடியவில்லை. அவர் எங்கே என்ற கேள்வியில் அவர் இலங்கையில் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டில் வாழ்கிறாரா என்ற மேலதிக விசாரணை உள்ளடங்குகிறது. அவர் இலங்கையில் தான் வாழ்கிறார் என்றால் என்ன செய்கிறார், என்ன முயற்சியில் ஈடுபடுகிறார் என்ற கேள்விகளும் எழுகின்றன.
வெளிநாட்டில் காணி நிலம் வீடு ஆகியவற்றின் உரித்தாளர் வாழ்கிறார் என்றால் அதற்குப் படையினர் மிகவும் பலமான கவனம் செலுத்துகின்றனர். அவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றுள்ளாரா என்ற ஆராய்ச்சி தொடர்கிறது.
காணி நிலம், வீடு ஆகியவற்றின் உரித்தாளர் வெளி நாட்டில் தற்காலிகமாக வாழ்கிறார் என்ற விடை கிடைத்தால் படையினர் மேலதிக கேள்விகளைக் கேட்கின்றனர். அவர் யாரோடு தங்கியிருக்கிறார், எப்போது இலங்கையை விட்டு சென்றார். திரும்பி வரும் சாத்தியங்கள் என்ன தொடர்பான உப கேள்விகளும் எழுகின்றன.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அந்தத் தமிழ் பேசும் சிப்பாய் சொன்ன செய்தியின் ஆபத்து தெளிவாகத் தெரிகிறது. அந்த இளவயது சிப்பாய் சொன்னான், வெளிநாட்டுத் தமிழர்களுடைய வீடு வாசல்களை இராணுவம் கைப்பற்றப் போகிறது. உண்மை பொய் தெரியவில்லை.
ஆனால் புகை இல்லாமல் நெருப்பு வராது. அரசல் புரசலாக வரும் செய்திகளில் பெரியளவு உண்மைகள் மறைந்திருக்கும் பாருங்கோ. வசதி இருந்தால் தற்காப்பு நடவடிக்கை எடுங்கள்.


No comments:
Post a Comment