
ஐ.நா.அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான விசாரணைகளை நடத்தாவிடின், சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்ளும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியூயோர்க்கில் ஐ.நா. செயலாளர் நாயகத்தை நேற்று முன்தினம் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலை, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக நிபுணர் குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறையான, வெளிப்படைத் தன்மைகொண்ட விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மூன் வலியுறுத்தியுள்ளார்.
இது விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிடின், சர்வதேச சமூகம் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடந்துவந்த ஆபத்தான , சோகமான நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சமாதானத்திற்காக பங்களிப்புச் செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள செயலாளர் நாயகம், தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் நற்பெயரை நிலை நாட்டுவதுடன் சர்வதேச நாடுகளில் இலங்கை தொடர்பாக காணப்படும் தவறான கருத்துக்களையும் மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆராய ஐ.தே.க.அமைத்துள்ள விஷேட குழு, அரசியல் தீர்வு தொடர்பான தமது நிலைப்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment