
வடக்கு,கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு நிறுத்தா விட்டால், தமிழ் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்துள்ளார்.
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையில்,
“சிறிலங்கா சுதந்திரமடைந்த சிறிது காலத்திலிருந்தே, 1956, 1958, 1977, 1980, 1983 என்று இனக்கலவரங்களால் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்களைப் பெரிதும் கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது.
நியாயமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாசைகளைப் பூர்த்தி செய்தவாறு பாதுகாப்பாகவும் கெளரவத்துடனும் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கான தமிழ்மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளே இத்தகைய வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களால், 1956 முதல் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டத் தேர்தல்களிலும் இந்தக் கோரிக்கை தொடர்ச்சியாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்பை அங்கீகரிப்பதற்குத் தவறியமையும், தம்மை நியாயமாகவும் சமமாகவும் நடத்த வேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த இனக்கலவரங்களுக்கான மூல காரணம்.
தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் மற்றும் ஏனைய அபிலாசைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றத் தவறியமை, தமிழ் மக்களின் கருத்தொருமிப்பின்றிப் புதிய அரசமைப்பை இயற்றியமை ஆகியவையே சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கும் சுமார் மூன்று தசாப்த காலம் நீடித்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் பேராட்டங்களுக்கும் இட்டுச் சென்றது.
இந்த ஆயுதப் போராட்டம் நாட்டிலுள்ள சகல இனங்களையும் சார்ந்த பொதுமக்களுக்குப் பெருமளவு தீங்கை ஏற்படுத்தி கட்டுக்கடங்காத வன்முறைகளுக்கும், உள்ளூர் மற்றும் பிராந்தியத் தலைவர்களின் படுகொலைகளுக்கும் வழிவகுத்தது.
அத்துடன் இந்த கட்டுக்கடங்காத வன்முறைகளால் நீதிக்கும் சமத்துவத்துக்குமான தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையும் மழுங்கடிக்கப்பட்டது.
இந்த ஆயுதப் போராட்டம் முடிந்து இப்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.
பிரிவுபடாத ஐக்கிய இலங்கையில் சம பிரஜைகளாக வாழ்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களைக் கையாளுவதற்கும் நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் அவை இன்னும் நிறைவு செய்யப்படாமல் உள்ளன.
1956ம் ஆண்டு முதல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த வன்முறைகளால் பெருமளவு தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து வெளியேறி உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாகி அல்லது தஞ்சம் தேடுபவர்களாகி இருக்கின்றனர்.
இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தி, இந்த நாட்டைச் சேர்ந்தவர்களான, உண்மையில் இந்த நாட்டுக்கு சட்டபூர்வமாக உரித்துடையவர்களான தமிழ் மக்கள் இலங்கையில் தொடர்ந்து வாழக் கூடியதாகச் செய்வது அவசியமானதாகும்.
அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், அவர்களது கெளரவத்தை மீள ஏற்படுத்துவதும், அவர்களின் சட்டபூர்வ அரசியல், சமூக, பொருளாதார, காலாசார அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய- ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றின் மூலம் மாத்திரமே இது சாத்தியமாகும்.
ஆயுதப் போர் நடைபெற்ற காலம் முழுவதும்- குறிப்பாக அதன் இறுதிக் கட்டங்களில் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். அங்கவீனமாக்கப்பட்டனர்.
பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இடப்பெயர்வுக்கு உட்பட்டு, அவர்களின் வீடுகளும், சொத்துகளும் அழிக்கப்பட்டு, நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அடிப்படை வசதிகளுடன் தமது வாழ்வை மீளத் தொடங்க முடியாதுள்ளனர்.
தம்மைத் தாமே காத்துக் கொள்ள முடியாதுள்ள பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பக் கூடிய வகையில், அவர்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்யக் கூடிய எந்தவொரு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலும் இல்லை.
இந்த மக்கள் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்து வரும் பகுதிகளில்- சிறிலங்கா அரசாலும், அதன் முகவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குடையவர்களாலும் காணி, சமய வழிபாட்டிடங்கள், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்குப் பரிகாரம் காணாத விடத்து அது நீண்டகாலத்தில் அவர்களின் எதிர்கால வாழ்வில் பெரும் தீங்கை ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சிறிலங்கா அரசின் கடமை.
முரண்பாட்டுக்குக் காரணமான அடிப்படை விடயங்களைத் தீர்ப்பதற்கான ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வொன்றை துரிதமாகக் காண வேண்டும்.
இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்கையை மீளக் கட்டியெழுப்பவும் மீள ஆரம்பிக்கவும் உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் மீது பாதகமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கும் சீர்செய்யவும் மற்றும் நிவர்த்தி செய்யவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்“ என்றும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment