பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் சென்ற தமிழர் ஒருவர் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவில் கடந்த 21 ஆண்டுகளாக வசித்து வரும் கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்பவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா காவல்துறையினர், சனல் 4 தொலைக்காட்சிக்கு பொய்யான காணொலிப் பதிவை வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
நாட்டையும், சிறிலங்கா இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படத்துக்கு இவரே பொய்யான காணொலிப் பதிவு ஆதாரங்களை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இவரை அடுத்த மாதம் 2ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கந்தவனம் ஜெகதீஸ்வரன் அடிக்கடி சிறிலங்காவுக்கு வந்து செல்பவர் என்றும், அவரிடம் இருந்து 71 இறுவட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொழும்பு பிளவர் வீதியில் உள்ள மொகமட் அசாத் சாலி என்ற வர்த்தகர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


No comments:
Post a Comment