
தொடர்ச்சியாக தமிழீழத் தளபதிகளின் மின்னஞ்சல் முகவரிகளை ஊடறுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சிறீலங்கா அதன் ஒரு பாகமாகவே தமிழினியின் மின்னஞ்சல் முகவரியையும் அவருடன் தொடர்பில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மின்னஞ்சல்களையும் கைப்பற்றியுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.2009ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி வவுணியாவிலுள்ள தடுப்பு முகாமில் காட்டிக் கொடுப்பால் கைதாகி இன்றுவரை விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழினியை நீதிமன்ற அனுமதியின்றி கடந்த மாதம் பயங்கரவாதத் தடுப்புப் பொலிசார் இரு தடவைகள் வெளியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
அவசர தேவைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதைத் தவிர வேறு எந்த ஒரு தேவைக்கும் நீதிமன்ற அனுமதி முன்னரேயே பெற்றிருக்கப்பட வேண்டும். இருந்த போதும் இந்த விவகாரத்தில் எத்தகைய அனுமதியும் பெறாமலேயே தமிழினியை சிறீலங்காப் பாதுகாப்புத் துறை விசாரித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டினால் நோர்வேஜிய மற்றும் கனடியப் பொலிசாரின் தகவல்களின் அடிப்படையில் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலே இந்த விசாரணை இடம்பெற்றதாகக் ஆரம்பத்திலே கருதப்பட்டாலும்,
தற்போது இடம்பெற்று வரும் விசாரணை புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெற்ற போராட்டங்களின் சூத்திர தாரிகளை அடையாளம் காணவும், புலம்பெயர்ந்த நாடுகளிற்கு விடுதலைப்புலிகளினால் அனுப்பட்டவர்களை அடையாளம் காணவுமே மேற் கொள்ளப்படுகிறது என்று தெரியவருகிறது.
அரசியற்துறைப் பொறுப்பாளது பா.நடேசனின் மின்னஞ்சல் முகவரியை கைப்பற்றியது போலவே வெளியுறவுப் பொறுப்பாளரான கஸ்ரோவின் பணியகம், அரசியற்துறைப் பணியகம் போன்றவற்றைக் கைப்பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் எவ்வாறு போராட்டம் நெறிப்படுத்தப்பட்டது என்பதை அந்த நாடுகளிற்கு அறிவிக்கும் பாங்கிலேயே இந்த முயற்சியில் சிறீலங்கா இறங்கியுள்ளது.
இதன் மூலம் மேற்குலக நாடுகளில் உள்ள சிறீலங்காவிற்கு எதிரான செயற்பாட்டாளர்களை இனங்காட்ட முடியும் என அது மேலும் நம்புகிறது.


No comments:
Post a Comment