மாலை 7.30 மணியளவில் ஆரம்பித்த இந்நிகழ்வு இரவு 10.00 மணிவரை நீடித்தது. ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் எம்மினத்தின் விடுதலைக்காக மிகவும் உயர்ந்த ஈகத்தைச் செய்த தற்கொடையாளர்களுக்கு மலர்வணக்கம் செய்து தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வணக்க நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய தமிழ்த்தேசிய உணர்வாளர், முதற்கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் ஆரம்பித்து வைத்த தற்கொடையாளரின் ஈகங்கள், எமது மண்மீட்புப் போரில் ஏற்படுத்திய திருப்பங்கள் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் இடம்பெற்ற அனைத்து உரைகளும், கவிதைகளும் கரும்புலி வீரர்களின் ஈகங்களையும், சாதனைகளையுமே உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தின. அத்துடன் தமிழீழம் என்ற உன்னத இலக்கை அடையும் வரை நாம் ஓயாது விடுதலைப் பயணத்தைத் தொடர வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தின.
சிறப்பு நிகழ்வாக மூன்று காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன. முதலாவது காணொளிக் காட்சி, முதல் பெண் தரைக் கரும்புலி வீரர் மேஜர் யாழினி அவர்களின் வீர வரலாற்றை அவரது சகோதரி வெளிப்படுத்திய உணர்வுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. மூன்று பெண் மாவீரர்களையும், ஒரு போராளியையும் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரே மேஜர் யாழினி என்பதை இக்காணொளி வெளிப்படுத்திய போது, அனைத்து மக்களின் கண்களும் கலங்கி நின்றன.
இரண்டாவது காணொளிக் காட்சி, எமது வடமராட்சி மண்ணை ஆக்கிரமித்து நின்ற சிறீலங்காப் படையினருக்கும், சிங்களப் பேரினவாதிகளுக்கும் திடுக்கிடும் செய்தியை வழங்கி, தற்கொடையாளர் சகாப்தத்தை தமிழீழ மண்மீட்புப் போரில் ஆரம்பித்து வைத்த முதற் கரும்புலி வீரர் கப்டன் மில்லர் அவர்களது வீர வாழ்க்கையை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. இக்காணொளியில், கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் தாயார் தனது மகனின் போராட்ட வரலாற்றை உணர்வுபூர்வமாக எடுத்துரைப்பதோடு, மகனின் இழப்பை எண்ணிக் கவலை அடையவில்லை-மாறாக மகனின் ஈகத்தை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறும் போது எல்லோரின் கண்களும் உணர்ச்சித் துளிகளை சிந்தின.
மூன்றாவது காணொளிக் காட்சி, கரும்புலி வீரர்களின் ஈகங்களை மிகவும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கும் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்களின் கவிதைகளாகவும், அதற்கான காட்சிகளாகவும் அமைந்தது.
இறுதியாக, எமது அணையாத தாகமாக இதயத்தில் கலந்துவிட்ட "தமிழீழ தாயகம்" என்பதை அனைவரும் உணர்வுபூர்வமாகப் பலமாக ஒலிக்க நிகழ்வு நிறைவு பெற்றது.


No comments:
Post a Comment