
கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் உள்ள திடீர் நகரை சேர்ந்தவர் ராஜா (வயது29) . லாரி டிரைவர். இவரது மனைவி நதியா (வயது25) இவர்களுக்கு நபின் (7) என்ற மகனும் பிரியதர்சினி (2) என்ற மகளும் உள்ளனர். ராஜா மீது கொலை மற்றும் வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக பல வழக்குகள் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு பல பெண்களுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டதால் ராஜாவை, மனைவி நதியா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் ராஜா கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கவரைப்பேட்டை போலீசார் லாரி டிரைவர் ராஜாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் லாரி டிரைவர் ராஜா வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூவலம்பேட்டில் உள்ள தனது அண்ணன் மணிகண்டன் (32) வீட்டுக்கு தம்பி ராஜா குடிபோதையில் சென்றார். சிறையில் இருந்தபோது என்னை வெளியே எடுக்கவோ, என்னை பார்க்கவோ ஏன் வரவில்லை? நீ எல்லாம் ஒரு அண்ணனா? என கூறி அண்ணன் வீட்டில் இருந்த டி.வி. மற்றும் சி.டி.பிளேயர்களை ராஜா கீழே போட்டு உடைத்தார்.
இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அண்ணன் மணிகண்டன் தம்பி ராஜாவை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மண்டை உடைந்து ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த தம்பி ராஜாவை, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணன் மணிகண்டன் மீது பாதிரிவேடு போலீசில் கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் புகார் செய்தார்.
கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


No comments:
Post a Comment