
நேதாஜியை இழிவுபடுத்தும் விளம்பரம் வெளியிடப்பட்டது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியில் பிரபலமான ”கோன் பனேகா குரோர்பதி” தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 4 ம் பாகம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை அமிதாப்பச்சன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இடையே ஒளிபரப்பான ஒரு விளம்பரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சுதந்திர போராட்டத்தின் போது, நீங்கள் எனக்கு ரத்தம் தாருங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறிய வாசகத்தை இழிவுபடுத்தும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது என்றும், அதை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி, நடிகர் அமிதாப்பச்சன், மத்திய தணிக்கை வாரியம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி முகேஷ் சர்மா என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மொகித் ஷா, ஜி.எஸ்.காட்போலே ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த விளம்பரம் நகைச்சுவையானது என்றும் யாரையும் இழிவுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விளம்பரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமிதாப்பச்சன் மற்றும் அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


No comments:
Post a Comment