
கடந்த ஆறு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்டசகுனம் என்று கொழும்பு வார இதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழில் எழுதப்பட்டுள்ள பத்தியின் முக்கிய பகுதிகள் வருமாறு-
“யாழ்.குடாநாட்டின் விவசாய நகரான ஆவரங்காலில் உள்ள வீட்டில் இருந்து இதற்கு முந்திய சனிக்கிழமை (ஜுன் 25ம் நாள்) தனது உந்துருளியில் 30 வயதான பாலச்சந்திரன் சற்குணநாதன் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) காலை அந்த வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள புத்தூரில் விளையாட்டு மைதானத்தின் கோல் கம்பம் ஒன்றில் அவரது சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்தச் சடலத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
அவரது இரண்டு கைகளிலும் இருந்த நகங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டிருந்ததாக தனது பிரேத பரிசோதனை அறிக்கையில் சட்ட மருத்துவர் எஸ்.சிவரூபன் கூறியுள்ளார்.
நைலோன் கயிற்றால் கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன.
யாழ்.குடாநாட்டில் 50ஆயிரம் படையினரும், காவல்துறையினரும் நிலை கொண்டுள்ள நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவது பாரிய கேள்வியை எழுப்புகிறது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அங்கு இயல்புநிலை மீள உருவாக்கப்படவில்லை.
கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 30 கொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நான்கு சிறிலங்கா படையினரும் அடங்குவர்.
உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் இந்த மாதம் அங்கு நடக்கவுள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உருவாக்குவதுடன், குழப்ப நிலையையும் உருவாக்கும். இது ஒன்றும் இரகசியமானது அல்ல.
இது போருக்குப் பிந்திய மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்ட சகுனத்தை காட்டுகிறது“ என்று அந்தப் பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment