
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பயணம் செய்த வாகனம் நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை அநுராதபுரம் ரம்பாவ பகுதியில் விபத்துக்குள்ளானதில்,அவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
ரம்பாவ சங்கிலிகனகர பகுதியில் ஏ9 வீதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் வாகனத்தின் முன் பகுதி நொருங்கி பலத்த சேதமடைந்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்றுக் காலை நடைபெறவிருந்த கட்சிக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இவர் கொழும்பிலிருந்து தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்தில் வாகன சாரதியும் சரவணபவன் எம்.பி.யும் சிறு காயமடைந்ததுடன் இவர்களுடன் சென்ற மெய்ப்பாதுகாவலரும் படுகாயமடைந்துள்ளார்..
இது பற்றி சரவணபவன் எம்.பி. கூறுகையில்;
எமது வாகனம் ரம்பாவ பகுதியில் சென்று கொண்டிருக்கையில் திடீரென எதிரே எமது பக்கமாக வாகனமொன்று வந்தது. இதனால்,விபத்து ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எமது சாரதி வாகனத்தை விதியோரத்திற்கு திருப்பிய போது அவ்விடத்தில் பத்தடி ஆழ பள்ளமும் அதற்கான மதகுமிருந்தது.
அந்த வாகனம் விலத்திச் சென்றதும், சாரதி எமது வாகனத்தை வீதிக்குக் கொண்டு வந்த போது அது வீதியை விட்டு விலகி எதிர்ப்புறத்தில் பள்ளத்திலிறங்கி பாரிய மரமொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தார்.
இதனால் வாகனத்தின் முன்புறப் பகுதி நொருங்கி பலத்த சேதமடைந்தது. வாகனச் சாரதிக்கு அருகிலிருந்த எம்.பி.யின் மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்ததுடன் எம்.பி.யும் சாரதியும் சிறுசிறு காயங்களுடன் பின்னர் ரம்பாவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மெய்ப்பாதுகாவலர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேநேரம் மருத்துவ பரிசோதனையின் பின் சரவணபவன் எம்.பி. ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த வாகனம் மதவாச்சி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.


No comments:
Post a Comment